புதன், 29 அக்டோபர், 2025

குதிரை வண்டி கதை

குதிரை வண்டி கதை


குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. 

அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. 

தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?

யானை

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ண பரமஹம்சர்....

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ண பரமஹம்சர்....


ஒரு நாள் விவேகானந்தர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். விவேகானந்தர் குருநாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு.

அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றெண்ணிய விவேகானந்தர் அறைக்கு வெளியே வந்தார்.

வெளியே ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே அமர்ந்திருந்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே விவேகானந்தர் ஆர்வத்துடன் அவரது முன்னர் சென்றார்.

என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை, விவேகானந்தருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் திருப்பிகொண்டு விட்டார்.

விவேகானந்தர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரமஹம்சரின் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் விவேகானந்தர். நான்காம் முறையும் வந்தார். அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார்.

எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். விவேகானந்தரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார்.

குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

விவேகா, உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான்.

“நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள்? நான் அதற்காக வர வில்லை. எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பினால் உங்களைக் காண விரும்புகிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்” என்றார் விவேகானந்தர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். விவேகானந்தரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை.

எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

கோவிலுக்கு செல்கிறோம். அங்கு கடவுள் நம்மோடு பேசுவார் என்பதற்கோ, நாம் அவரோடு பேசுவோம் என்பதற்கோ மட்டும் செல்வதில்லை. பேசுதலைத் தாண்டிய ஒரு அன்பு அங்கே உண்டு. அதை உணர்வோம்.

அன்பே சிவம் 🙏🏻

இனி வராது அந்த சந்தோஷம் அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ?'

இனி வராது அந்த சந்தோஷம் 
அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ?'
--------------------------------------------------


1930- 1990வரை பிறந்த நம்மை
 போன்றவர்களை இக்கால ஜெனரேஷன் குழந்தைகள் என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே! WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF.

·தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம்தான்.

·எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

·கிச்சன் அலமாரிகளில் 'சைல்டு புருஃப் லாக்' போட்டு இருந்ததில்லை. 

·புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

·சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டியதில்லை. 

·பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

·நாங்கள் விளையாடியது நிஜநண்பர்களிடம் தான் நெட்நண்பர்களிடம் இல்லை.

·தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.

·ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

·அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

·காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

·சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

·உடல் வலிமை பெற ஊட்டச்சத்து பானங்கள்அருந்தியதில்லை .

மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

·எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

·எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர்.அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.

·அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள "ஏலேய்ய்ய்.." என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

·உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.

.·எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

·எங்களிடம் செல்போன், டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

·வேண்டும்பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமூகச் செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

·உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.

·நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம்; ஆனால் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

·இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.

·இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது சொல்லுங்கள்..

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!


1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொறுத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது..

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!

மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியமாக காட்சியளிப்பீர்கள்..

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்து கொள்ளுங்கள்..

 தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

அவரின் காலத்திலேயே அவருக்கு மரியாதை செய்வோம்...
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்..

அவர் உன்னுடன் அருகில்
இருக்கும்போது அவருடைய
அருமை உனக்கு தெரியப்போவதுமில்லை.

தந்தை சிறுகதை

தந்தை சிறுகதை


1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.

"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 

2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.
 
திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".

மகள் சொன்னாள்.

4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?

-படித்ததில் பிடித்தது