வியாழன், 17 நவம்பர், 2022

சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் குபேர சம்பத்து கிடைக்கும்

🌺சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் குபேர சம்பத்து கிடைக்கும்⛩️

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான்.

அதற்கு வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , இராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.

மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . 

இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.

*ஸ்ரீசொர்ண* *ஆகர்ஷண பைரவர்* *காயத்ரி* 

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி: தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்!

*ஸ்ரீசொர்ணாகர்ஷண* *பைரவர் தியான* *சுலோகம்* 

காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்

*ஸ்ரீசொர்ண* *ஆகர்ஷண பைரவ* *மகா மந்திரம்* 

ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்
ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ

*சொர்ண ஆகர்ஷண* *பைரவர்* *நாமாக்கள்* 

ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ

*ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்* 1

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

*ஸ்ரீசொர்ண* *ஆகர்ஷண பைரவர்* *மூலமந்திரம் 2* 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!

*ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண* *பைரவர் மூலமந்திரம்* 3

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!   🪷🪷🪷

செவ்வாய், 25 அக்டோபர், 2022

கந்தசஷ்டி சஷ்டிஆரம்பம் விரதமிருப்பது எப்படி?

கந்தசஷ்டி சஷ்டி ஆரம்பம் :

விரதமிருப்பது எப்படி?

* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.25 முதல் தினமும் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம். 

திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.

* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.

* மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

* ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

தாகம் தீர்த்த வேலாயுதம்
திருச்செந்துாரில் உள்ள நாழிக்கிணற்றில் உள்ள தண்ணீர், கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை. ஆனால் இந்த கிணறைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் உப்பு நீரே கிடைக்கிறது. 

ஆனால் நாழிக்கிணற்றில் மட்டும் சுவையான நீர் கிடைக்க காரணம் என்ன தெரியுமா... சூரபத்மனுடன் போரிட்ட வீரர்கள் தாகத்தால் சிரமப்பட்டனர்.

அப்போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தமே இந்தக்கிணறு.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஆவணி அவிட்டம் என்றால் என்ன

ஆவணி அவிட்டம் என்றால் என்ன
AVANI AVITTAM ENDRAL ENNA

ஆவணி அவிட்டம் என்பது இந்துப் பிராமணர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஓர் விசேடம் வாய்ந்த நாளாகும். இதனை ஆண்டுச் சடங்கு (உபநயனம் ) எனக் கூறுகின்றனர்.

இதனை அநேகமாக பிராமணர், விஸ்வகர்மா மற்றும் செட்டியார் போன்றோர் விசேடமாக அனுஷ்டிப்பர். இது ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் இந்நாளை கொண்டாடுகின்றனர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும்.

Table of Contents
ஆவணி அவிட்டம் என்றால் என்ன
உபநயனம் என்றால் என்ன
உபநயனம் செய்தல்
பூணூல் தரித்தவர்கள் பூணூல் புதுப்பித்தல்
பூணூலின் வகைகள்
பூணூலின் மகிமை
ஆவணி அவிட்டம் என்றால் என்ன
ஆவணி அவிட்டம் என்பது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமி தினத்திலே பிராமணர்கள் உபநயனச் சடங்கை அனுஷ்டிப்பது ஆகும்.

உபநயனம் என்றால் என்ன
உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு இன்றியமையாத ஓர் வாழ்க்கை நிகழ்வு ஆகும். பிராமண ஆண் பிள்ளைகள் முதன் முதலாக பூணூல் தரிக்கும் நிகழ்வே “உபநயனம்” என அழைக்கப்படுகிறது.

உபநயனம் செய்தல்

முதலில் ஐந்து வயதான சிறுவனை மங்கள நீராட்டுவார்கள். மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி எனப் பெயர். குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும் மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேகம் செய்வது போல் தலையில் விடுவார்கள்.

இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும் மாசற்றதாக ஆகும் என்பது ஐதீகம். இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல் நாளே நடக்கும். உபநயனத்திற்குச் சிறுவனின் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு நாள் கணிப்பார்கள். அதற்கு முதல் நாள் இந்த உதகசாந்தி நடைபெறும்.

மனதில் விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித நீர் தெளிப்பர். மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும். பின்னர் மாணவனின் வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள். இதற்கு ரட்சாபந்தனம் எனப் பெயர். இன்னல்களிலிருந்து காக்கும் ரட்சை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைப்பது. இதற்கு “நாந்தீ” என்று பெயர். இதில் ஒன்பது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு. முன்னோர்களிடம் பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை வேண்டும் விதமாகச் செய்யப்படுவது. பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ணலாம்.

பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில் அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே முன் காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்குத் தனியாக உணவு சமைத்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே விரும்புகின்றனர்.

ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆகவே இன்றைய சூழ்நிலையில் இதுவே நடைபெற்று வருகிறது. இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள் முடிவடைகின்றன.

பூணூல் தரித்தவர்கள் பூணூல் புதுப்பித்தல்

இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவார்கள்.

பூணூலின் வகைகள்
கள்ளப் பூணூல்

ஆவணி அவிட்டம் அன்று உபநயனம் செய்து சாஸ்திரத்துக்காக மாத்திரை போடப்படும் பூணூல் கள்ளப் பூணூல் ஆகும். அன்று மாத்திரமே அணிவர். பின்னர் கழற்றி விடுவர். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரம்மச்சாரிய பூணூல்

திருமணம் ஆகாதவர்களுக்கு போடப்படுகின்ற பூணூல் பிரம்மச்சாரிய பூணூல் எனப்படும். இப்பூணூலில் மூன்று நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் காணப்படும் முடிச்சு பிரம்மமுடிச்சு எனப்படும்.

பிரகஸ்த பூணூல்

திருமணம் ஆனவர்கள் போடுகின்ற பூணூல் கிரகஸ்தப் பூணூல் எனப்படும். இதில் ஆறு நூல்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.

சஷ்டி அப்தி பூணூல்

60 வயதான பின்னர் சஷ்டி அப்தி பூர்த்தி என்று கூறப்படுகிறது. அறுபதாம் கல்யாணம் முடிந்தவர்களுக்கு போடப்படும் பூணூல் “சஷ்டி அப்தி பூணூல்” எனப்படும். இதில் ஒன்பது நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். நடுவில் பிரம்ம முடிச்சு காணப்படும்.

பூணூலின் மகிமை
பூணூல் தரித்த ஒருவரே, ஆகம விதிக்கு அமைவாக அமைந்துள்ள ஆலயங்களில் பூஜை செய்ய முடியும். வேதங்களை சரிவர கற்று உணர முடியும். ஆலயங்களில் மந்திர உச்சாடனங்கள் செய்ய முடியும். பூணூல் தரித்தவர்களை தீய சக்திகள் நெருங்காது.

கரிநாள் என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன
KARINAL ENDRAL ENNA

அறிமுகம்
கரிநாள் என்றால் என்ன
கரிநாள் கணக்கிடப்படும் முறை
அறிமுகம்
நம் வீட்டில் ஒரு சுப காரியத்தினை நடத்த வேண்டும் என்றால் அந்த நாள் நல்ல நாளா என்பதை நாட்காட்டியில் பார்த்துவிட்டுத்தான் சுப நிகழ்ச்சியை வைக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.

இந்தப் பழக்கம் பொதுவாகப் பலபேருக்கு உண்டு. அப்படி அந்த நாட்காட்டியில் கரிநாள் என்று இருந்தால் அந்த நாட்களில் எந்தவொரு நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சந்திரனை வைத்து சந்திராஸ்டமம் எப்படி கணக்கிடப்படுகின்றதோ அதேபோல் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கரிநாள் கணக்கிடப்படுகின்றது. சந்திராஸ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதை மற்றும் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதுபோல் கரிநாளில் சுப காரியங்களைச் செய்வதில்லை.

கரிநாள் என்பது நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கையாகும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உட்பட எந்த நல்ல காரியமும் கரிநாளில் செய்வதில்லை.


எனினும் தெய்வம் சம்மந்தப்பட்ட கோமங்கள், யாகங்கள், பூஜைகள் இவைகள் எல்லாம் இந்தத் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கரிநாள் என்றால் என்ன
கரிநாள் என்றால் என்ன என்பதை சுரக்கமாகக் கூறினால் சூரியனின் தீட்சண்யம் (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே ஆகும்.

கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். கரிநாள் அன்று சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியைவிட அதிகமாக இருக்கும்.

கரிநாள் என்பது அஸ்டமி, நவமி போன்றோ அல்லது பரணி, கிருத்திகை போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல.

கரிநாள் கணக்கிடப்படும் முறை
தமிழ்நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்.

தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷ ராசியிலும் சஞ்சரிக்கத் தொடங்கி பங்குனியில் மீன ராசியில் தனது சுற்றினை முடிக்கின்றார்.

12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுவதால் சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை வைத்து கரிநாள் கணக்கிடப்படுகின்றன.


இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாள்களாகும். இவ்வாறு நமது நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ்மாத நாட்களில் மாறுபடாது. எல்லா வருடமும் ஒரே தேதியில்தான் கரிநாட்கள் வரும். அதாவது

தை மாதம் – 1,2,3,11,17
மாசி மாதம் – 15,16,17
பங்குனி – 6,15,19
சித்திரை – 6,15
வைகாசி – 7,16,7
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16, 29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,10,17
மார்கழி – 6,9,11
இவை கரிநாட்களாகும்.

இது அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட நாட்களே அன்றி ஜோதிட ரீதியாக கடைப்பிடித்துவரும் விடயம் அல்ல.

இந்நாளில் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதனால் உடலிலுள்ள அனைத்துச் சுரப்பிகளும் ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று அதிகமாகத் தூண்டப்படும். இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்புண்டு எனக் கூறப்படுகின்றது.

புராணங்கள் என்றால் என்ன

புராணங்கள் என்றால் என்ன
PURANANGAL IN TAMIL

புராணங்கள் வேதத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன. புராணங்கள் எழுதப்பெற்ற காலத்தினைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் எழுதப்பட்ட காலத்தை இன்றளவும் துல்லியமாகக் கணித்துக்கூற முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும் தோன்றியுள்ளன. இவை உலக அளவில் மிகப் பழமையான நூல்கள் எனக் கருதப்படுகின்றன.

Table of Contents
புராணங்கள் என்றால் என்ன
யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்
பஞ்சபுராணம் என்றால் என்ன
புராணங்கள் என்றால் என்ன
புராணம் என்ற சொல்லானது சமஸ்கிருத மொழியிருந்து பெறப்பட்டதாகும். புராணம் என்பது “பழமையான வரலாறு” என்று பொருள்படுகின்றது.

மேலும் வேதங்களைத் தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறுவதே புராணங்கள் எனலாம்.

யுகங்கள் பற்றிய புராண ரகசியங்கள்

யுகம் என்பது இந்துக்களின் காலக்கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்றாகும். யுகங்கள் மொத்தம் 4 வகைப்படும். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பனவையே அவை நான்குமாகும்.

கிருத யுகம் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழும் யுகமாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரமும் 840 வருடங்களும் வாழலாம். இந்த யுகமானது 1718,000 ஆண்டுகள் கொண்டது. இங்கு அசுரர்கள் பாதாள உலகிலும், தேவர்கள் மேல் உலகிலும், மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதாயுகத்தில் நான்கில் 3 பங்கு மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். அங்கு வாழும் மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும் சராசரியாக 616 வருடங்களும் வாழ்வார்கள். இவ் யுகமானது 129000 ஆண்டுகள் கொண்டதாகும். ஸ்ரீராமர் இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்தார்.

துவாபரயுகத்தில் மக்கள் சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள் இங்குள்ள மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் கொண்டவர்களாகவும் 300 ஆண்டு காலமும் வாழ்வார்கள். இந்த யுகம் 864000 ஆண்டுகள் கொண்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த யுகமாகும். இங்கு அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தார்கள்.

கலியுகத்தில் நான்கில் ஒருபகுதி மக்கள் அற நெறியுடனும் 3 பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். இங்கு மனிதர்கள் சராசரியாக 6 அடி உள்ளவர்களாகவும் 120 வருடங்களும் வாழ்வார்கள். இந்த யுகம் 436000 ஆண்டுகள் கொண்டதாகும். இந்த யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்குவார்கள்.

இந்த நான்கு யுகங்களும் இணைந்து மகா யுகம் அல்லது சதுர்யுகம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு 71 மகா யுகங்கள் கடந்தால் மனுமந்திரம் என்று பெயர். மொத்தமாக 14 மனுமந்திரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7 ஆவது மனுமந்திரம் ஆகும்.

பஞ்சபுராணம் என்றால் என்ன

பஞ்ச என்று சொல்லப்படுகின்ற வார்த்தையின் பொருள் ஐந்து என ஒரு பொருள் இருந்தாலும் அதன் பொருளில் இங்கு பார்ப்பதில்லை.

பஞ்ச என்ற சொற்தொடருக்கு வடமொழியின் “விரிவது” என்று பொருளாகும். புராணம் என்பது “பெருமை நிறைந்தது” என்று பொருளாகும்.

அதே வேளை புரா என்றால் “பழமை” ணம் என்றால் “புதுமை” என்றும் பொருளுண்டு. எனவே பழையதுக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் இருக்கக் கூடிய சிவபெருமானை அவருடைய பெருமை விளங்குமாறு போற்றித் துதித்துப்பாடும் பாடல்களுக்குத்தான் பஞ்சபுராணம் என்று பெயராகும்.

பிரதோஷம் என்றால் என்ன

பிரதோஷம் என்றால் என்ன
PRADOSHAM ENDRAL ENNA

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு உரிய விரத நாட்களுள் பிரதோஷமும் ஒன்றாகும். இது சிவ வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக காணப்படுகிறது.

Table of Contents
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் உருவான வரலாறு
பிரதோஷ பூஜை
பிரதோஷ வகைகள்
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய விசேட விரத நாள் ஆகும்.

அதாவது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷம் உருவான வரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைய தீர்மானித்து, மந்தரம் எனும் மலையை மத்தாகவும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள உள்ள வாசகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு ஒரு புறம் அசுரர்களும் மறுபுறம் தேவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைய முயற்சித்தனர்.


அப்போது மந்தரமலை கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதனால் திருமால் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்திர மலையை தன்னில் தாங்கிக் கொண்டார். பின்னர் அசுரர்களும் தேவர்களும் மீண்டும் திருப்பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.

கடையும் பொழுது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பானது தனது ஆலகால விடத்தை கடலிலே கக்கியது. அந்த நச்சுத்தன்மையின் வீரியத்தால் அசுரர்களும் தேவர்களும் அச்சம் அடைந்து சிவபெருமானிடம் உதவியை நாடி சென்றனர்.

சிவபெருமான் அவர்களை காத்தருளும் பொருட்டு அந்த கொடிய ஆலகால விடத்தை எடுத்து உட்கொண்டார்.

உமாதேவியார் அதனை சிவபெருமானின் வயிற்றிற்குள் செல்ல விடாது, அவரது கழுத்தில் தடுத்து நிறுத்தினார். இந்நிகழ்வுகள் நடந்த நாளே பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரதோஷ பூஜை
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.

அதாவது, நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணங்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.

பிரதோஷ வகைகள்

தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறந்தது.

மாசப் பிரதோஷம் : பௌர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு சிறந்தது.

நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்.

திவ்யப் பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு வழிபாடு செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் வ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, சப்தரிஷி மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும்.

உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.

ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர்.

அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். சூநான் என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.

சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம் எனப்படும்.

அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.