செவ்வாய், 1 நவம்பர், 2022

வேணுகோபால பார்த்தசாரதி கோவில்...

#ஆலயதரிசனம்..

வேணுகோபால 
பார்த்தசாரதி கோவில்...

மகா விஷ்ணுவின் பல அவதாரங்களில் ராமா அவதாரமும் ஒன்று. அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதி மற்றும் ஆன்மீக வழக்கங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்றும், இப்படித் தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவராக ராமா அவதாரம் உள்ளார். இந்த விஷ்ணுவின் அவதாரமான ராமர், மற்றொரு அவதாரக் கடவுளான பெருமாளை வழிபட்டத் தலம் எங்கே உள்ளது என தெரியுமா ?

கோவில் சிறப்பு..

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த பெருமாள் திருத்தலம். இருப்பினும் தனது பொழிவினை இழக்காமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. இந்தக் கோவிலுக்கும் 15 மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சுரங்கப்பாதை உள்ளது. போர்க்காலத்தின் போது மன்னர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், போர்க் கருவிகளை பாதுகாக்கவும் இந்தப் பாதையை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன....

வரலாறு...

ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற போரின் போது ராவணன் கொல்லப்பட்டான். இதனால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதுகுறித்து பிரம்மனிடம் முறையிட்ட ராமருக்கு, இந்த தோஷத்தில் இருந்து நீங்க வேணுகோபால பார்த்தசாரதியை வழிபடுமாறு அவர் அறிவுறுத்தினார். ராமரும் இத்தலம் வந்து 13 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு தனது தோஷத்தை நீக்கிக் கொண்டார்....

தல அமைப்பு...

வருமையில் இருந்து மக்களுக்கு புதையலைத் தந்து காத்தவர் இந்த வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள். சங்க காலத்தில் குறுநில மன்னர் வரி வசூல் செய்ய செங்கம் வந்தபோது கட்டியதே இந்தக் கோவில். மகாமண்டபத்தில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் மண்டபத்தைத் தாங்கியுள்ளன. கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் பத்மாவதி அம்மையாரும், ஆண்டாளும் அருள்பாலிக்கின்றனர். அவர்களைச் சுற்றிலும் உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

திருவிழா..

பெருமாளுக்கு உகந்த மாதமான வைகாசியில் 10 நாட்களுக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமாளும், ஆண்டாள் அம்மையாரும் யானை வாகனத்தில் அமர்ந்து நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நடைதிறப்பு .

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்...

வழிபாடு..

மனதளவில் பாதிக்கப்பட்டிருப்போர், அதிகப்படியான மன அழுத்தத்தால் விரக்தியில் இருப்போர், ஆழ்வார் சன்னதியில் அமர்ந்து வழிபட மன நிம்மதி நிலவும். திருமணத் தடை உள்ள பெண்கள் இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி சன்னதியை சுற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை...

நேர்த்திக்கடன்

வேண்டியவை யாவும் நிறைவேறியதும் பெருமாளுக்கும், அம்மையாருக்கும் புத்தாடைகள் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கனடை பக்தர்கள் செலுத்துகின்றனர்...

அமைவிடம்..
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செங்கம். தேசிய நெடுஞ்சாலை 77யில் ஐயன்பாளையம், நல்லூர், மண்மலை கடந்தால் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள இந்த பெருமாள் திருத்தலத்தை அடையலாம். திருப்பட்டூர், போளூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர பேருந்து வசதிகள் எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

திங்கள், 31 அக்டோபர், 2022

நோய் தீர்க்கும் குன்றக்குடி குமரன் கோவில்

#ஆலயதரிசனம்...

நோய் தீர்க்கும் 
குன்றக்குடி குமரன் கோவில்..

இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது.

நோய் தீர்க்கும் குன்றக்குடி குமரன் கோவில்..

கி.பி. 1780-களில் சிவகங்கைச் சீமையை அரசாண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் பல்வேறு கட்டங்களில் சுதந்திரப் போர் புரிந்து, இறுதியில் 1801-ல் துக்கிலிடப்பட்டவர்கள் பெரிய மருதுவும், அவர் தம்பி சின்ன மருதுவும்.

பிளவை நோய் தீர்த்த விபூதி..

ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.

இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.

உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.

இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.

திருப்பணிகள் செய்த மருதுசகோதரர்..

திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்று தல வரலாறு கூறுகிறது.

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரரையே தனது வழிபடு தெய்வமாகக் கருதி, அங்கே ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைத்திருந்த மருது சகோதரர்கள், குன்றக்குடி சண்முகநாதரிடம் தீராத அன்பு கொண்டு திருப்பணிகள் செய்து உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தின் இரு தூண்களிலும் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவமாக இன்றும் காட்சி தருவது காலத்தால் அழியாத கலைச் சின்னமாகும். சிலைக்கு கீழே பிளவை நோய் தீர்த்த பெருமை கல்வெட்டில் காணப்படுகிறது.

ஆலய அமைப்பு..

இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.

முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், தனது ஆணவத்தால் சாபம் பெற்றிருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.

குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.

மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார்.

தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது.

கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.

இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது பிரசித்தி பெற்றது.

பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்கும் சண்முகநாதப் பெருமானிடம், மக்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து ‘நீயே காப்பு’ என்று தத்து கொடுத்துச் செல்வது அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்கும், குன்றக்குடி சண்முகநாத சுவாமி திருக்கோவில், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மருது பாண்டியரின் பிளவை நோய் மட்டுமல்ல, மக்களின் பிணிகளையும், கவலை களையும் போக்க வல்ல அருணகிரிநாதர் பாடிய குன்றக்குடி குமரனை, நாமும் மலை ஏறிச் சென்று மனமாற தரிசிக்கலாமே.

அமைவிடம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் - திருப்பத்தூர் சாலையில் இருந்தும் செல்லலாம். கற்பகவிநாயகர் அருள்பாலிக்கும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான், குன்றக்குடி குமரன் இருக்கிறார்...

புதன், 26 அக்டோபர், 2022

மயிலம்முருகன் கோயில்

#ஆலயதரிசனம்...

மயிலம்
முருகன் கோயில்...

திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

மூலவர்:
முருகன் சுப்பிரமணியர்

கோயிலின் வரலாறு..

ஆலயத்திலிருந்து காணப்படும் ஊரின் தோற்றம் மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.

சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாக தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. 

மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது. 

மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

திருவிழா ..

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

திறக்கும் நேரம்...
காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்...

வெள்ளி, 7 அக்டோபர், 2022

முப்பாத்தம்மன்திருக்கோயில்.

#ஆலயதரிசனம்...

முப்பாத்தம்மன்
திருக்கோயில்....

1. அன்னை ராஜராஜேஸ்வரியின் சக்தியின் மற்றொறு வடிவமே முப்பாத்தம்மன். இந்த அம்மனுக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளது.

2. முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள் "முப்போகத்தம்மாள்" என பக்தியோடு வணங்கி வந்தனர். 

3.விளைச்சலுக்கு உரிய தேவியாக இருந்து, வேளாண் மக்களைப் பாதுகாக்கும் அம்மன் பெயர் காலப் போக்கில் மருவி "முப்பாத்தம்மன்" என்று மாறியது.

4. முன்னொரு காலத்தில் சென்னையில் மழைவிடாமல் பொழிந்து கொண்டே  இருந்தது. அந்த பேய் மழையை கண்டு தியாகராய நகர் மக்கள் அஞ்சினார்கள். 

5. அந்த சமயம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது, பெரும் மழை வெள்ளதில் சிலையாக அன்னை பராசக்தி வெளி வந்தாள். ஒரு குளத்திற்கு வந்து “இதுவே என் இடம்” என உறுதியோடு அங்கேயே நின்றாள். 

6. அப்போது கனியப்பன் என்ற முதியவர், அம்மன் சிலையை கண்டு, குளத்தில் இறங்கி அம்மன் சிலை தொட்ட உடன் பேய் மழை நின்றது.

7. பல நாட்களாக எட்டிபார்க்காத சூரியன், அம்பாளை காண வேண்டும் என்ற ஆர்வதில் மேகங்களை விலக செய்து, அம்பாளை தரிசித்த ஆனந்தத்தில் பிரகாசித்தது.

8. ஊர் மக்கள் மகிழ்சியடைந்தார்கள். தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்களை தந்திடவே அம்மன் நம்மை தேடி வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள்.

9. கனியப்பன், முப்பாத்தம்மன் என பெயரிட்டு தன் சக்திக்கு ஏற்ப, சிறிய அளவில் முகப்பு மண்டபமும், சுற்றுச் சுவரும் எழுப்பி கோயில் கட்டினார்.

10. முப்பாத்தம்மனை தினமும் பால் அபிஷேகம் செய்து வணங்கியதால் கனியப்பன் வறுமை நீங்கி செல்வம் பெருகியது. அம்மனை வணங்கும் பக்தர்களின் துன்பமும் நீங்கியது

11. பக்தர்களால் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டது. உடன் வேப்பமரம் புற்றும் உருவாகி வளர்ந்தது. பக்தர்களின் குறை தீர்க்கும் அம்மனாக திகழ்கிறாள்.

12. அந்த வேப்பமரத்தை தொட்டு வணங்கினால், நோய்நொடிகள் நீங்கும், இதை பக்தர்கள் மனதார உணர்ந்துள்ளனர்.

13. ஆலயத்தின் சிறப்பே இங்கு அமைந்துள்ள பிரமாண்ட புற்றுதான். சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்து இருக்கும் புற்றில் மஞ்சள், குங்குமம் தெளித்தால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள். 

14. நாக தோஷம் உள்ளவர்கள், திருமணதடை நீங்க, குழந்தை வரம் வேண்டுவோர் எனப் பலரும் புற்றைச் சுற்றி பால் ஊற்றி நலன் அடைந்துள்ளனர்.

15. நாகதோஷம், காலசர்ப்பதோஷம் விலக அதற்குரிய தலங்களுக்கு செல்லமுடியாதவர்கள், இந்த முப்பாத்தம்மனை வணங்கி புற்றில் பால் ஊற்றி வணங்கினால், நாகதோஷம் சர்ப்பதோஷம் விலகும்.

16. கணபதி, நவகிரகங்கள், முருகப்பெருமான், ஐய்யப்பன், ஆஞ்சநேயர் எனப் பல சந்நிதிகளைக் கொண்டு இந்த ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 

17. நான்கு திருக்கரங்களுடன் சிறிய வடிவச் சிலை என்றாலும், காண்பவரோடு கலந்து விடக்கூடிய கருணை கொண்டவள். 

18. வேண்டியவை யாவையும் நிறைவேற்றித் தரும் இந்த மங்கல நாயகியாம் முப்பாத்தம்மனை ஆடி மாதங்களில் வந்து வணங்குவது சிறப்பானது.

19. ஆடி மாத வருடாந்திர உற்சவ விழா வெகு சிறப்பாக நடக்கும். கூழ் வார்த்தலும், இரவு அலங்கார திருவீதி உலாவும் நடைபெறும்.

20. சென்னை நகரின் தியாகராய நகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் ஆலயம் அமைந்துள்ளது.

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், புதுச்சேரி

#ஆலயதரிசனம்...

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், புதுச்சேரி

சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார்.

பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.

இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 114வது தேவாரத்தலம் ஆகும்.

சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹhரம் செய்து அவரது பதவியை பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். அதேசமயம் எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன், பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி எமன் சிவத்தல யாத்திரை சென்றான். இத்தலம் வந்த எமதர்மன் தீர்த்தம் உண்டாக்கி, தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். எமன் தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு அருள வேண்டும் என வேண்டவே, சிவன் இங்கே தங்கினார்.

யாழ் இசைத்த சிவன்...
எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார்.

அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, சம்பந்தர் பதிகம் பாடினார். யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.

யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் யாழ்மூரிநாதர் என அழைக்கப்படுகிறார். 

கருவறையில் லிங்க வடிவில் உள்ள சுவாமி எப்போதும் வெள்ளிக்கவசத்துடன் தரிசனம் தருகிறார். சிவன் யாழ் இசைத்தபோது அம்பாள் தேனும், அமிர்தமும் சேர்ந்தது போல இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை, தேனாமிர்தவல்லி என்கின்றனர். இவள் இடது கையை தொடையில் வைத்தபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். குரல் வளம் வேண்டுபவர்கள் இவளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவன், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள்.

சிவன் யாழ் இசைத்தபோது, குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடினவாம். இதனை திருஞானசம்பந்தர், எழில் பொழில் குயில் பயில் தருமபுர பதியே! என்று பாடியிருக்கிறார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சம்பந்தருக்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார். தர்மன் உண்டாக்கியதாக கருதப்படும் தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த நீரை பருகினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தின் தலவிநாயகர் கற்பகவிநாயகர் எனப்படுகிறார். 3 நிலையுடன் கூடிய ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்....

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருநல்லூர்

ஆலயதரிசனம்...

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருநல்லூர்..

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 20-வது தலமாக திருநல்லூர் விளங்குகிறது. இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு...

இந்த ஆலயம் கோச்செங்கட்சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரம் கொண்டு இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிராகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும், அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும், தென்புறம் அமர்நீதி நாயனார், தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. அம்பாள் கிரிசுந்தரி, தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.

அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர், காசி விநாயகர், பாணலிங்கம், விஸ்வநாதர், முருகன், நால்வர், குந்திதேவி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரை மண்டபங்களிலும், பிராகாரத்திலும் தரிசிக்கலாம்.

தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது. இதை “ஆதிமரம்” என அழைக்கின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.

திருப்புகழ் தலம்....

இத்தலத்திலுள்ள முருகப் பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராகக் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தல வரலாறு...

ஒரு சமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன், கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு, பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர்.

தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆதிசேடன் தன் பிடியைச் சிறிது தளர்த்தினார். இதுதான் தக்க சமயம் என்று எண்ணி, வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக்கொண்டு வந்து தென்னாட்டில் திருநல்லூரில் ஒன்றையும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே, இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சம்...

இங்குள்ள மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சி தருகிறார். எனவேதான், மூலவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம்

இத்தல மூலவர், சுயம்பு லிங்கமாக சதுர ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார் பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால், லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்கள் இருப்பது ஒரு சிறப்பம்சம்.

முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும்போது, இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார் என்ற பெருமையை உடையது இக்கோவில். இரண்டு பிராகாரங்களை உடைய இக்கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள அஷ்டபுஜ காளி சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத்தக்கது. கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க, இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

பாண்டவர்களின் தாய் குந்தி தேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும், கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் தொற்றிக்கொள்கிறது. இந்தத் தோஷம் நீங்க இறைவனிடம் குந்தி முறையிட்டாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடினால் மனநிம்மதி கிடைப்பதுடன், செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது, ஏழு கடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலந்த சப்தசாகர தீர்த்தம் தென்னகத்தில் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் இருப்பதை அறிந்தாள்.
இத்தலம் வந்து சிவபூஜை செய்து இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி மனநிம்மதி அடைந்தாள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப்பெற்றது ஒரு மாசிமக நாளாகும். எனவே, இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடுவதால், கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.

திருநாவுக்கரசர், திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை திருநல்லூர் தலத்தில் இறைவன் நிறைவேற்றுகிறார். தம் திருவடிகளை அப்பரின் தலை மீது இத்தலத்தில் சூட்டி அருளினார். அப்பேறு பெற்ற திருநாவுக்கரசர், இறைவனைப் பதிகம் பாடி தொழுதார். இதன் காரணமாக, பெருமாள் கோயிலில் சடாரி சாத்தும் வழக்கம் போன்று, இத்தலத்தில் சிவன் பாதம் பொறித்த சடாரியை பக்தர்களுக்கு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண, உலகத்திலுள்ள அனைத்து ஜீவகோடிகளும் திரண்டு சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமணக் காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், ‘‘நீ வேண்டும்போது நான் உனக்கு திருமணக் காட்சி அருளுகிறேன்” என்றார் சிவன். அதன்படி, சிவனின் திருமணக்கோலத்தை அகத்தியர் கண்ட பல தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்றாகும். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர், இங்குள்ள மூல லிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.

சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால் திருநல்லூர் ஒரு திருமண பிரார்த்தனைத் தலம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதிருக்கும் பெண்களும், ஆண்களும் இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் மலர் மாலை அணிவித்து, பின்பு ஒரு மாலையை வாங்கி அணிந்து சென்றால், தடைபட்டுள்ள அவர்களது திருமணம் விரைவில் நடைபெறுகிறது என்ற நம்பிக்கை உள்ளது...

அமைவிடம்...

தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள ஊர் பாபநாசம். பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற ஊரில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். 

தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுந்தரப்பெருமாள் கோயில் வழியாக இத்தலம் வந்தடையலாம்...