புதன், 22 நவம்பர், 2023

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : விருத்தாசலம்
முகவரி : விருத்தாசலம், கடலூர்.
தாலுகா : விருத்தாசலம்

வரலாறு : அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவ சமய சிவன் கோவிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். 

சிவபெருமான் முதன்முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு : 

இத்தலம் முன்னொரு காலத்தில் குன்றாக இருந்தது. விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோவிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப் பேசப்பட்டு வருவதாகும். 

இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் 'மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல, சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தல வரலாற்றுச் செய்தி. 

தல சிறப்பு : 

இந்த கோயிலின் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. 

63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது. 

இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இந்த மரம் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில் வெளிப்பிரகாரத்தில் 22 ஆகம லிங்கத்திற்கு தனிசன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 

கோவிலில் குரு சன்னதிக்கு அருகில் விநாயகர் சிலைக்கு முன்பு பாத வடிவில் பலிபீடம் இருக்கின்றது. இது பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி என்றும் கூறப்படுகிறது. 

பிரார்த்தனை : 

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 

இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இருப்பிடம் :

உளுந்தூர்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : சிவபுரி
முகவரி : சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : சிவபுரி

வரலாறு : அருள்மிகு உச்சிநாதர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். இக்கோவிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோவில் எனவும் வழங்குகின்றனர்.

தல வரலாறு : 

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் - பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார். தனது தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். திருஞானசம்பந்தரை குளக்கரையில் உட்கார வைத்துவிட்டு, அவர் தந்தை மட்டும் நீராடச் சென்றார். 

சம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!' என அழுவதை கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்துவிட்டார். 

சம்பந்தரின் தந்தை குளித்துவிட்டு வந்து பார்க்கும் போது, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,' எனச்சொல்லி குச்சியால் அடிக்க கையை ஓங்கினார். 

சிவ பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய சம்பந்தர், 'தோடுடைய செவியன்' என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. 

சம்பந்தரின் திருமணத்திற்காக மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு சென்றனர். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். 

அப்போது சம்பந்தரும், அவருடன் வந்த அனைவரும் பசியுடன் இருப்பதை உணர்ந்த இந்த தலத்தில் இருக்கும் இறைவன், கோவில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் 'உச்சிநாதர்' என்றும் 'மத்யானேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். 

தல பெருமை : 

2000 வருடங்களுக்கு முன் பழமையானது. 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமண கோலத்துடன் அருள்பாலிக்கிறார். 

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். 

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது. 

சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருவதிகை
முகவரி : திருவதிகை,பண்ருட்டி. பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : பண்ருட்டி

வரலாறு : திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு :

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார். அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

கோவில் அமைப்பு :

கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோவிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இறைவன் தேரில் வந்ததால் இந்த திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். திவதிகை கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

பிரார்த்தனை :

இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம் அழியும். இங்குள்ள ஈசனை வழிப்பட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சார்ந்த எந்தவிதமான நோயாக இருந்தாலும் தீரும். அம்பாள் சன்னிதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். குழந்தை இல்லாதவர்கள் இந்த ஈசனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் மற்றும் நல்ல வேலை மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும் மக்கள் இந்த சிவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

அருள்மிகு தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

அருள்மிகு தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : தீர்த்தனகிரி
முகவரி : தீர்த்தனகிரி.கடலூர். கடலூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : குறிஞ்சிப்பாடி

வரலாறு : சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்தத்திற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கோவில் கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரில் உள்ளது.

தல வரலாறு :

முன்பு ஒரு காலத்தில் இப்பகுதியில் வசித்து வந்த ஒரு விவசாய தம்பதியினர் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம், நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன், என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

தல பெருமை :

இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. தலவிநாயகர் வலம்புரிவிநாயகர். கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோவில்

அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருவேட்களம்
முகவரி : திருவேட்களம், சிதம்பரம், கடலூர்.
தாலுகா : சிதம்பரம்

வரலாறு : அருள்மிகு பாசுபதேசுவரர் கோயில், திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 2வது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

தல வரலாறு : 

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன், நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார். 

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். 

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. 

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப் பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம், உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி 'சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். 

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

தல பெருமை : 

அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். 

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். 

இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 

ஒருமுறை சம்பந்தர், சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார். 

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலை வைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பிரார்த்தனை : 

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. 

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
மாவட்டம் : கடலூர்
இடம் : திருச்சோபுரம்
முகவரி : திருச்சோபுரம், கடலூர்.
தாலுகா : குறிஞ்சிப்பாடி

வரலாறு : சம்பந்தர் பாடல் பெற்ற மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சோபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு : 

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. 

சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

தல பெருமை : 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. 

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்குமம் வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். 

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். 

தட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் வலது கையில் அக்னி, இடது கையில் நாகம் என மாற்றி வைத்துள்ளார். 

இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பம்சம்.

பிரார்த்தனை : 

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

போக்குவரத்து :

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தூரத்தில் ஆலப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் மங்களபுரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.