திங்கள், 21 ஜூலை, 2025

என்றோ கடந்துபோன சம்பவங்களை நினைத்து சங்கடப்படுபவரா நீங்க?

என்றோ கடந்துபோன சம்பவங்களை நினைத்து சங்கடப்படுபவரா நீங்க?

உணவு குறித்த விழிப்புணர்வு தற்போது பெருகி வருவதைப்போல உணர்வுகளைப் பற்றிய கருத்து, கவலை மற்றும் கலாச்சாரம் இவைகளும் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாறி வருகிறது. ஆம் இவைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிதான் நமது மன ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமாக வெற்றிக்கும் அவசியமாகிறது.

இந்த உணர்வு கலையை ஒரு தோட்டக்கலைக்கு ஈடாக ஒப்பிடலாம். காரணம் இது ஒரு அழகான தோட்டத்தை உருவாக்க, களைகளை பிடுங்கி சீர் செய்து நீர் பாய்ச்சி விலங்கினங்கள் நுழையாமல் பேணிக்காப்பது போல நமக்குள் ஊறும் உதவாக்கரை உணர்வுகளை வளரும் முன்னே கிள்ளி எறியவேண்டும். ஆரோக்கியமான நேர்மறை உணர்வுகளை வளரவிட வேண்டும்.

நமது உடலில் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் எவ்வளவு முன்னேற்பாடுகளுடன் தயாராகிறோம். அதே போல்தான் நமது உணர்வுகளை கையாளுவதற்கும் நமது முழு மனோசக்தியை உபயோகிக்க வேண்டும்.

ஏதோ ஒன்று நம்மை முடக்கி போட்டு விடுகிறது அது நமது முந்தைய தோல்விகளாகவும் இருக்கலாம் அல்லது மனம் வருந்த தக்க சம்பவங்களாகவும் இருக்கலாம். எதிர்பாராத இழப்பு தந்த சில விபத்துகள்கூட காரணமாக இருக்கலாம்.

தொடர் உடல் நலக்குறைவுகளும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து வரும் மனவலிமை இன்றி அதையே நினைத்து வருந்தினால் நமது செயல்திறன்தான் குறையும்.

நம் உணர்வுகள் சரியாக கையாளப்படாவிட்டால் அவைகளே நமது வாழ்க்கைக்கு வில்லன்களாக இருக்கக்கூடும் என்ற மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உணர்வுகளை கையாளுவதற்கான ஒரு அணுகுமுறை இங்கு. அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள மன வலிமையை அதிகரித்துக் கொள்ளுதல்தான் அது.

அதிர்ச்சியை தாங்கக்கூடிய முதல் சாதனம் வாழ்க்கையின் மீது நாம் கொண்டுள்ள ஒரு பார்வை அல்லது தத்துவம் ஆகும். தூரத்திலிருந்து ஒரு மலையை நாம் பார்க்கலாம். அது அழகான நீல நிறத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியம்போல வெண் பஞ்சு மேக கூட்டம் சூழ அட்டகாசமாக தெரியும். வெகு அருகே சென்று காணும்போது எங்கு பார்த்தாலும் ஒரே கூர்மையான பாறைகள் கையை வைத்தால் காயப்படுத்தும் வகையில் இருக்கும்.

இவை எல்லாம் தூரத்தில் இருந்து நம் கண்களுக்கு தெரிவதில்லை அப்பொழுது நம் கண்களுக்குபட்ட அழகு பொய்தானே.? வாழ்க்கையும் அதேபோலதான் தூரத்திலிருந்து பார்த்தால் வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது. சிறிய சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக் கொள்ளாமல் ஒரு பெரும் அழகின் ஒரு மிகச்சிறு அங்கமாக கவனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றாக அந்த பழைய நினைவுகளை நாம் எடுத்துக்கொண்டு அதை அகற்றப் பழகுவோமே?

ரோஜா மலரின் முள்தானே அதனை இதழ்களின் மென்மையைக் கூட்டிக் காண்பிக்கிறது வாழ்க்கையின் மீது ஒரு அகன்ற பார்வை தேவை. அது பெரும்பாலான சமயங்களில் ஒரு ஆழ்ந்த அமைதியை தருகிறது. வாழ்க்கையின் பல கோணங்கள், எண்ணற்ற ருசிகள் வாழ்க்கையை நன்றாக சுவைக்க உதவுகின்றன. வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து காட்டுவதற்கு வைராக்கியம் தேவை.

அந்த வைராக்கியம் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். நமது பழைய நினைவுகளையும் அகற்றுவதில் இருந்தால் வெற்றிதான்.

கவனக்குறைவா? கவலை வேண்டாம்! GenZ இளைஞர்களுக்கான எளிய தீர்வுகள்!

கவனக்குறைவா? கவலை வேண்டாம்! GenZ இளைஞர்களுக்கான எளிய தீர்வுகள்!


இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு கவனச்சிதறலும் கவனக்குறைவும் முக்கியமான பிரச்னைகளாக மாறி வருகின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் ஏற்படும் கவனக்குறைவால் தடுமாறி, சில சமயங்களில் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த நிலை அவர்களின் அன்றாட வாழ்க்கையையும், செயல்திறனையும் பெரிதும் பாதிக்கிறது. இந்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் கவனச்சிதறலுக்கான காரணங்களையும், அதனை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் இங்கே வாசிக்கலாம்.

கவனச்சிதறலுக்கான சில முக்கிய காரணங்கள்

டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு:

ஸ்மார்ட்போன்கள், சமூக வலைத்தளங்கள், வீடியோ கேம்கள் போன்றவை இளைஞர்களின் நேரத்தை பெருமளவு பாதித்து, அவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. தொடர்ந்து வரும் அறிவிப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்கள் போன்றவை ஒரு பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தடுக்கின்றன.

 மன அழுத்தம் மற்றும் பதட்டம்:

படிப்பு, வேலை, எதிர்காலம் குறித்த கவலைகள், தனிப்பட்ட பிரச்னைகள் போன்றவை மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உருவாக்குகின்றன. இதுவும் கவனச்சிதறலுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

தூக்கமின்மை:

போதிய தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டை பாதித்து, கவனம் செலுத்தும் திறனை குறைக்கிறது.

சமச்சீரற்ற உணவு:

ஆரோக்கியமற்ற உணவுகள், குறிப்பாக பாஸ்ட் புட்கள் அதிகமாக உட்கொள்வது, மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்க விடாமல் செய்து, கவனக்குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

செயலில் தெளிவின்மை:

என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான இலக்கு இல்லாத நிலையில், இளைஞர்கள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர்.

கவனச்சிதறலை சமாளிப்பது எப்படி?

* டிஜிட்டல் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்.

  * ஸ்மார்ட்போனில் அறிவிப்புகளை அணைத்து வையுங்கள்.

   சமூக வலைத்தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு செயலிகளுக்கு சிறிய நேரம் மட்டுமே ஒதுக்கி பயன்படுத்துங்கள்.

தூங்கும் முன் மற்றும் கண் விழித்த உடனடியாக மொபைலை தவிர்த்து, சிறிது நேரம் வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

* ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்:

* ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

* முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை .

* சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்.


ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள்

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பதை தவிருங்கள்.

ஒரு பணியை முடிக்கும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த வேண்டாம். ஒரே பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது.

தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்:

 * தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

 * யோகா பயிற்சி மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும்.

போதுமான தூக்கம் அவசியம்:

 தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை சீராக்கி, கவனத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

   * சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள்

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பதை தவிருங்கள்.

ஒரு பணியை முடிக்கும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த வேண்டாம். ஒரே பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது.

தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்:

 தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

 யோகா பயிற்சி மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும்.

போதுமான தூக்கம் அவசியம்:

 தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை சீராக்கி, கவனத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

   சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

* தொடர்ந்து ஒரு வேலையை செய்யாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சிறு சிறு இடைவெளிகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

* இது சோர்வை குறைத்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.

கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:

   புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது போன்றவை மூளையை சுறுசுறுப்பாக வைத்து, கவனத்தை மேம்படுத்தும். கவனச்சிதறல் என்பது பலருக்கும் ஏற்படும் இயல்பு நிலை. ஆனால் அதை சரியான முறையில் அணுகினால் கட்டுப்படுத்த முடியும். மேற்படி கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் கவனத்தை உயர்த்தி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை நன்கு எடுக்கவும் உதவும். தெளிவான சிந்தனை இருந்தால், நீங்கள் எதை செய்தாலும் சிறப்பாக செய்யலாம். எனவே, நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி நிச்சயமாக உங்களுக்கே.

உங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படனும்?

உங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படனும்?

உங்கள் உடன் பணிபுரிவோர், அக்கம் பக்கத்தில் வசிப்போர், உறவினர் மற்றும் நண்பர்கள் என பல தரப்பட்ட மனிதர்களுடன் நீங்கள் பழகிவருவீர்கள். அவர்களுள் ஒரு சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படாமல், அவர்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் காட்டுபவர்கள் பொதுவாக தன்மீதுள்ள வெறுப்பையும், தனக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களையும் பாதுகாப்பின்மையையும் முன்னிறுத்தவே அதைப் பிறர் மீது காண்பிப்பார்கள்.

எனவே அதை நீங்கள் சிறிதும் கண்டுகொள்ளாமல் விலகியிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் எதிர்மறையான செயல்களை நீங்கள் உள் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், எந்தவிதமான எதிர்வினையாற்றும் எண்ணத்தை மாற்றியமைக்கவும் உதவும்.

பிறரின் எதிர்மறையான செயல்கள் உங்களின் சக்தியை குறையச் செய்வதாயிருப்பின், அதற்கு நீங்கள் ஒரு வலுவான எல்லைக் கோட்டை அமைத்துக்கொள்வது சிறப்பு. அப்போது, அவர்களின் ஒவ்வொரு முடிவில்லா விவாதங்களிலும் நீங்கள் பங்கேற்க வேண்டிய தேவை இருக்காது. அமைதியான முறையில், ஓர் இடைவெளியை உண்டுபண்ணிக் கொண்டு, தேவையின்றி எதிர்வினையாற்றாமல் இருப்பதே விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி. இதனால் உங்கள் நிம்மதியும் பறிபோகாது.

மற்றவரின் எதிர்மறை எண்ணங்களும் வெறுப்பும் உங்களை அவர்கள் அளவுக்கு தாழ்ந்து போய்விட ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். அமைதியாகவும் அன்போடும் சூழ்நிலையை கையாளும்போது, அது உங்கள் பலத்தையும், அறிவு முதிர்வையும் கட்டுப்பாடான உணர்வுகளையும் வெளிப்படுத்தும். இதற்குப் பின்னும் அவர்கள் நடத்தையில் மாற்றம் வரவில்லையெனில், உங்கள் கொள்கைகளை வலுவாகப் பற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி விடுங்க.

ஒருவர் உங்கள் மீது வெறுப்பைக் கொட்டிக்கொண்டே இருக்கும்போது, அதை மனதில் வைக்கவே வேண்டாம். அதே நேரம் உங்கள் மீது உண்மையான அன்பையும் கவனிப்பையும் செலுத்தும் நபர்களுடன் அதிக நேரம் செலவிட தயங்காதீர்கள். இது உங்கள் மதிப்பை உயர்த்தவும், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி காட்டவும் உதவும்.

வாழ்க்கைப் பயணம் மிக நீண்டது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களை விரும்பியே ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை. இதைப் புரிந்துகொண்டு, விஷமிகளை விட்டு விலகி இருப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழி. இதனால் நீங்கள் தோற்று விட்டதாக அர்த்தமில்லை. நீங்கள் நடிப்பதைத் தவிர்த்து வாழ்க்கைக்கு மிக முக்கியத் தேவையான அமைதியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என அர்த்தமாகும்.

ஊக்கப்படுத்துவது (மோட்டிவேஷன்) என்பது பிறவிக் குணமல்ல!

ஊக்கப்படுத்துவது (மோட்டிவேஷன்) என்பது பிறவிக் குணமல்ல!

மோட்டிவேஷன் என்றால் ஒரு நபரினுடைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உள் தூண்டுதலாகும். இது ஒரு செயலை தொடங்குவதற்கும், அதைத் தொடர்வதற்கும் அத்துடன் விடாமுயற்சியுடன் இலக்குகளை அடைவதற்கும் ஊக்குவிப்பை அதாவது தூண்டுதலை கொடுக்கும் ஒரு உளவியல் சக்தியாகும். மோட்டிவேஷன் என்பது ஒருவருடைய செயல்களின் திசையை நிர்ணயிக்கிறது. ஒரு செயலை தொடர் வதற்கும், அதைத் தொடரவேண்டிய அவசியம் மற்றும் தடைகளை எதிர்கொள்ளும்பொழுது நிலைத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மோட்டிவேஷன் என்பது உள் உந்துதல். அதாவது உள்ளிருந்து வரும் ஒரு ஆசை அல்லது விருப்பம் எனக்கொள்ளலாம். இது ஒரு இலக்கை அடைவதற்கான விடாமுயற்சியை ஊக்குவிக்கிறது. ஒரு செயலைத் தொடங்கவும், தொடரவும் தூண்டுகிறது. உதாரணத்திற்கு ஒரு மாணவன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் அது அவனது மோட்டிவேஷனாகும்.

அந்த உந்துதலே அவனைப் படிக்க தூண்டும். விடாமுயற்சியுடன் படிக்க வைத்து சாதிக்கத் தூண்டும். கடைசியில் அந்த மோட்டிவேஷனானது தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

பிறரை ஊக்கப்படுத்துவது அதாவது மோட்டிவேஷன் என்பது பிறவி குணம் அல்ல; அது ஒரு திறன், அதை வளர்க்கலாம். தன்னம்பிக்கை, தன்மதிப்பு போன்ற குணங்கள் மோட்டிவேஷனை அதிகரிக்கின்றன. ஆனால் அவை பிறவியுடன் வருவதில்லை; அவற்றை நாம் தான் வளர்த்துக்கொள்ளதான் வேண்டும். ஒரு காரியத்தை செய்ய உந்துதல், அதாவது தூண்டுதல் பிறவியுடன் சேர்ந்து வருவதில்லை; தேர்ந்த பயிற்சி மூலம்தான் அதனை வளர்த்துக்கொள்ள முடியும்.

தன்னம்பிக்கையும், தன் மதிப்பும் மோட்டிவேஷனை அதிகரிக்க உதவும்; ஆனால் இவையும் பிறவியுடன் சேர்ந்து வருவதில்லை. இவற்றையும் தேர்ந்த பயிற்சி மூலம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தன் மதிப்பு போன்ற குணங்களை செழுமைப்படுத்தி வளர்த்துக்கொள்ள நல்ல அனுபவங்களும், சாதனை மற்றும் சுயபரிசோதனை போன்ற செயல்களும் உதவுகின்றன.

ஒரு நல்ல செயலை செய்யும்போது அதற்கான பாராட்டைப் பெறுவோம். அந்த பாராட்டைப் பெறும்போது அது நம்மை மேலும் மோட்டிவேட் செய்து சாதிக்க வைக்கும். மோட்டிவேஷன் என்பது பிறவி குணம் அல்ல. அது ஒரு திறன். அதை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.

தெரிந்தே செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாதவை!

தெரிந்தே செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாதவை!

நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால் இன்று நீ அறிவாளியாவாய் - இது சாரதா தேவியார் கூறியது.

தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை. சிலர் அவர்களையும் அறியாமல் செய்யும் தவறுகளை மன்னித்துவிடலாம். தவறுதான் என்று தெரிந்தும். தவறு செய்பவர்களை மன்னிக்கவே முடியாது.

தவறு செய்யாமல் வாழமுடியாதா? எதற்காகத் தவறு செய்ய வேண்டும்! அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இப்படித் தனக்குள்ளே கேள்விகள் கேட்டு உணர்ந்து கொண்டவர்கள் மட்டுமே தவறுகளைச் செய்ய அஞ்சுவார்கள்.

தவறு செய்யப்பயப்படுபவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள்தான் சிறந்த மனிதர்கள் ஆவார்.

எதற்கெடுத்தாலும் தவறு செய்யும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தற்சமயம் வேண்டுமானால் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம். பிறகு அதிலேயே மூழ்கிக் காணாமல் போய்விடுவார்கள்.


தவறு செய்துவிட்டு மனசாட்சிக்குப் பயந்து பாவமன்னிப்புக் கேட்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் மன்னிப்பு கேட்டு விட்டோம். இனிமேல் என்ன என்று தொடர்ந்து தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவன் மது குடிக்கிறான். அளவுக்கு அதிகமாகவே குடித்துவிடுகிறான். போதையில் தள்ளாடுகிறான். தெருவில் வந்து தைரியசாலி போல் வீரவசனம் பேசுகிறான். அவன் அப்படி நடந்து கொள்வது அவனுக்கு வேண்டுமானால் அழகாய் இருக்கலாம்.

ஆனால், அனைவரும் அவனை அருவருப்பாகத்தான் பார்ப்பார்கள். அந்தப் போதை அவனின் பாதையை மாற்றிவிடும்.


நல்ல சிந்தனை, நல்ல செயல்களைச் செய்பவர்களுடன் சேரவேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த சிந்தனையும். செயலும் பிறக்கும்.

எத்தனை காலம்தான் வெள்ளையனுக்கு நாம் அடிமையாகவே இருப்பது. நாமும் சுதந்திரக் காற்றைவாசிக்க வேண்டும் என்று எழுந்த உணர்வுதான் சுதந்திரம் ஆகும்.

வாழ்க்கை முழுவதும் எதற்கும் அடிமையாகவே வாழவேண்டுமா. மனிதன் பிறக்கும்போது. எதற்கும் யாருக்கும் அடிமையாகப் பிறப்பதே இல்லை.

தவறுகளைத் தெரிந்தே பழகிக்கொள்கிறான். பின் மீளாத் துயரில் விழுந்து விடுகிறான். அவனால் ஒதுங்கிச் செல்லமுடியும். அத் தவறுகளில் இருந்து மீண்டு வெளியே வரமுடியும்.

அதற்கு அவன் முயற்சி செய்யவேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல், தம்மைத் திருத்திக்கொள்ளவே முடியாது.


செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது! அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற முயற்சியும் வேண்டும். தவறு எனத் தெரிந்தே செய்வதை உடனே நிறுத்தி விடவேண்டும்.

மெல்ல நிறுத்துவது என்பது முடியாத செயலாகும். அது ஒரு வகை நொண்டிச் சமாதானம் ஆகும். இப்படிப்பட்ட உள்ளம் முழுமையாய் அதில் இருந்து வெளியே வரவே முடியாது.

இப்படித் தொடர்ந்து வெளியே வரத்துடிக்கும் எண்ணத்துடன், அவற்றிற்கு அடிமையாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது.

இதேபோல் சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்லவேண்டும் எனத் தனக்குள் நினைப்புது உண்டு. ஆனால் சில நேரங்களில், சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்வது இல்லை.


ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் செயலையும் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறோம். தெருவில் குப்பைகளைக் கொட்டி துர்நாற்றம் வீசச் செய்கிறோம். கண்டபடி சிறுநீர் கழித்தும், மலம் கழித்தும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இதனால் பொது மக்களின் சுகாதாரம் பாதிக்கும் என்பதெல்லாம் தெரிந்தும், தொடர்ந்து செய்கின்ற தவறுகள்தானே!

இதற்காகவெல்லாம் அரசாங்கம், தனித்தனியே அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்லமுடியாது.

அனைவரும் தம்மைத் திருந்திக்கொண்டாலே போதும் தவறுகளும் திருத்தப்படும். அதற்குண்டான ஞானத்தெளிவும் பிறக்கும்.

அன்பால் இணைவோம் அலுவலக உறவில்!

அன்பால் இணைவோம் அலுவலக உறவில்!

பணி செய்யும் இடத்தில், மேலதிகாரிகள், உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், கீழே பணிபுரியும் நபர்கள் என எல்லோருடனும் நல்லுறவு இல்லாமல் போனால், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. இங்கு ஏற்படும் மனஉளைச்சல், வீட்டிலும் மன அழுத்தம் அதிகம் ஆகும். உங்கள் உயர் அதிகாரிகளிடம் மரியாதை, சக ஊழியர்களிடம் மதிப்பு கீழே பணிபுரியும் மற்றவர்களிடம் நம்பிக்கை என எல்லாம் பெற நீங்கள் என்ன செய்யலாம்? செய்யவேண்டும்?

அன்பாய் சொல்லுங்கள்

அடுத்தவர்கள், வேலையில் தவறு செய்யலாம் அல்லது ஒருவரின் நடவடிக்கையே அலுவலகத்தில் இயல்பை குலைப்பதாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டுமிடத்தில் நீங்கள் இருந்தாலும், பலர் முன்னிலையில் கடிந்து பேசாதீர்கள். அது அவரின் சுயமரியாதையை நொறுங்கச் செய்துவிடும். சரியாக செய்ய கற்றுக்கொடுங்கள். அவர் செய்த தவறுகளை கண்டிப்பு கலந்த அன்போடு புரியும் படி சொல்லுங்கள்.


உண்மையைக் கண்டறியுங்கள்

பெறும்பாலான அலுவலக உறவுகள் சீர்குலைந்து போவது தவறான யூகங்களால்தான். ஒரு தோல்விக்கு ஒரு கான்ட்ராக்ட் கிடைக்காமல் போனதற்கு, ஒரு வியாபாரத்தில் நஷ்டம் வந்ததற்கு அலுவலக ரகசியம் ஒன்று கசிந்ததற்கு, இவர்தான் காரணம் என ஆதாரம் இல்லாமல் யாரையும் சுட்டிக்காட்டவோ, தண்டிக்கவோ செய்யாதீர்கள். திறந்த மனதோடு பேசும் உண்மையை கண்டறிங்கள். உண்மையில்லாத எந்த விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பேசாதீர்கள்.

அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்

உங்களுக்கு சம்பந்தமில்லாத வெற்றிக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள். உங்களால் நிகழ்ந்த ஒரு பிரச்னைக்கு, அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்கவும் செய்யாதீர்கள். தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்தமுறை அதை சரி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.


ஒதுங்கி இருங்கள்

எல்லா இடங்களிலும் யாராவது ஓரிருவர் பிரச்னை செய்பவர்களாகவோ, அடுத்தவர்களிடம் வீண் வம்புக்கு போகிறவர்களாகவோ, இருப்பார்கள். இதுதான் துணிச்சல் என அவர்களாகவே தங்களைப்பற்றி பெருமையாக நினைத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

உழைப்பை பாராட்டுங்கள்

கடினமாக உழைப்பது மட்டுமே முக்கியம் இல்லை ஒரு அலுவலகம் அல்லது தொழில் நிறுவனம் என்பது பலரின் கூட்டு முயற்ச்சி தேவைப்படும் இடம். அடுத்தவர்களோடு நன்கு பேசி உறவாடுவது மட்டுமே கூட்டு முயற்சியை சாத்தியமாக்கும். அடுத்தவர்களுடன் பேசி உழைப்பையும் பாராட்டுங்கள். அதுவே உங்களை அவர்களோடு நெருக்கமாக்கும்.

கருத்தைச் சொல்லுங்கள்

இன்னொருவர் பேசும்போது குறுக்கிடாதீர்கள். அதற்காக மௌனமாகவும் இருக்காதீர்கள். ஆமாம், சரி, என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி அவர்களை பேசதூண்டுங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் பேசுவது மட்டும் அல்ல கேட்பதும் கவனிப்பதும் கூட தகவல் தொடர்பில் முக்கியமானவை.

தட்டிக்கொடுங்கள்

யாரைப் பற்றியும் பின்னால் பேசாதீர்கள். அடுத்தவர்களின் முதுகுக்குப் பின்னால் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை தட்டி கொடுப்பது மட்டுமே! வீண் வம்பு பேசாதவர் என பெயர் எடுங்கள். எல்லோரும் நன்றியோடு உங்களிடம் பழகுவார்கள்.

அலுவலகம் முன்னேறும் போது நீங்களும் முன்னேற்றம் பெற போகிறீர்கள். இதைச் சக ஊழியர்களுடன் பேசி அவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.


சுக துக்கங்களில் பங்கெடுங்கள்

ஆபீஸ் பழக்கம் ஆபிஸோடு மட்டும்தான் என்று கறாராகக் கத்திரித்து கொள்ளாதீர்கள். அலுவலக நண்பர்களின் சுக துக்கங்களில் பங்கெடுங்கள். நெருங்கிய உறவுகளை விட இவர்களே உங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருக்கிறார்கள். தினம் நீங்கள் அவர்களோடுதான் இருக்கிறீர்கள், என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுக துக்கங்களில் உங்களோடு இருக்கப் போவதும் அவர்களே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் வாரம் முழுக்க நாம் பெரும்பாலான நேரத்தை செலவிடுவது பணி செய்யும் அலுவலகம் அல்லது தொழில் செய்யும் நிறுவனத்தில்தான் சொல்லப்போனால் சிலர் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலும் பகுதியை செலவிடுவது இங்குதான்! அலுவலகத்தில் அலுவலக உறவுகளோடு அன்பால் இணைந்து பணியாற்றினால் அலுவலக உறவில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியோடு இருக்கலாம்.