ஞாயிறு, 12 ஜனவரி, 2025

திருவாதிரை சிறப்புகள்

திருவாதிரை சிறப்புகள்


ஆண்டுக்கு ஒருமுறையே கிடைக்கும் திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம்!

இன்றைய நாள் சிதம்பரத்தில் மட்டுமல்ல திருவாரூரிலும் மிக விசேஷம். ஆரூராரின் பாத தரிசனம் கிடைக்க கூடிய நாள் இது. வருடம் முழுவதும் தியாகராஜரின் முகத்தை மட்டுமே நம்மால் தரிசிக்க இயலும். திருவாதிரை நாளில்தான் தியாகராஜரின் வலது பாதத்தை தரிசனம் செய்ய முடியும்.

மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருவாதிரைத் திருநாள். மார்கழி மாதப் பௌர்ணமியோடு இணைந்து வரும் இந்த நாளை பண்டிகையாய்க் கொண்டாடுகிறோம். 
என்ன பண்டிகை? 
'திரு' என்கிற அடைமொழி இரண்டு நட்சத்திரத்திற்குத்தான் உண்டு. ஒன்று திருவோணம், இன்னொன்று இந்த திருவாதிரை. இன்றைய நாளை ஆதிரை நன்னாள் என்றும் கூறுவார்கள். நாம் கிருஷ்ணனுக்கு ரோகிணி நட்சத்திரம், ராமனுக்கு புனர்பூசம் நட்சத்திரம் என்று சொல்வதைப்போல் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம், இந்தத் திருவாதிரை நட்சத்திர நன்னாள்.

'ஆருத்ரா' என்றால் 'நனைந்த' என்று பொருள். சிவபெருமானுடைய கருணைக் கடலில் நாமெல்லாம் நனைந்து போகிறோமாம். அதனால் இந்த நன்னாளுக்கு ஆருத்ரா தரிசனம் என்றும் பெயர். அந்த சிவபெருமானை நினைத்து ஆராதனை செய்ய உகந்த நாள் இன்று. 

திருவாரூர் தியாகராஜர்
ஏன் அவரை நினைக்க வேண்டும்? 
சிவபெருமானுக்கு 'ஆசுதோஷி' என்று பெயர். நாம் வேண்டும் அனைத்தையும் அப்படியே நமக்கு ஆசீர்வதிப்பார் என்று பொருள். 

இந்த நாளின் சிறப்புகள்!
சேந்தனார் என்றொரு சிவபக்தர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சிவனடியாருக்கு உணவு கொடுத்துவிட்டுதான் அவர் சாப்பிடுவார். இப்படி ஒரு திடமான கொள்கையைத் தன் வாழ்வில் கொண்டவர் இவர். சிவனின் மீது அப்படி ஒரு அளவற்ற பக்தி. எந்த ஒரு பொருளும் கையில் இல்லை என்றாலும் ஏதாவது செய்து பொருளை ஈட்டி சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து அதை ஒரு சிவனடியாருக்குக் கொடுத்து மகிழ்பவர்.

ஒரு நாள் அவர் கையில் எந்த உணவும் இல்லாதநேரம் சிவனடியார் ஒருவர் வந்துவிட்டார். இப்போது அவருக்கு உணவு கொடுத்தாக வேண்டும் தன்னிடம் உள்ள அரிசிகளைத் திரட்டி களியாகச் செய்து படைத்தார். அன்று அங்கு வந்து அவரை சோதித்து உணவு உண்டு சென்றது சிவபெருமான்தான்.

இது எப்படித் தெரிகிறது?
மறுநாள் தில்லை வாழ் அந்தணர்கள் கோயிலைத் திறந்து பார்த்த போது களி சிந்தியிருந்தது கண்டு வியப்படைகின்றனர். எப்படி இங்கே களி வந்தது என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். அப்போது ஓர் அசரீதி ஒலித்தது.

"இது என் பக்தன் வீட்டில் நான் விரும்பி உண்ட களியமுது. இனி இந்த நாளை என் பக்தன் சேந்தனார் படைத்ததுபோல் களி செய்து என்னை ஆராதியுங்கள்" என்றது. அன்று தொடங்கி இன்றுவரை திருவாதிரை நன்னாளில் களி செய்து நெய்வேத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

திருவாரூர்
பக்தனுக்காக இரங்கிய இறைவன்! 
திருவாதிரைக்கு முதல் நாள், தேர் ஓடும் சிதம்பரத்தில். ஒரு தடவைத் தேர் சேற்றில் மாட்டிக்கொள்ள அதனால் நகர முடியவில்லை. எல்லோரும் முயன்று பார்த்தும் நகரவில்லை. அப்பொழுது ஒருவர் மீது திடீரென்று இறைவன் இரங்கி, சேந்தனார் வந்து பல்லாண்டு பாடினால் தான் தேர் நகரும் என்று கூறினார். இதைக் கேட்ட சேந்தனர் மனம் உருகினார். தேர் இருக்கும் இடத்துக்கு வந்து மனம் மகிழப் பல்லாண்டு பாடினார். அப்போதுதான் மன்னரும் மற்றவர்களும் அவர்தான் சேந்தனார் என்று அறிந்துகொண்டனர். தேரும் நகர்ந்து நிலை சேர்ந்தது. என்கிறது சிதம்பரம் தலபுராணம்.

அமுதாய் படைக்க வேண்டியவை:
இந்த நாளில் களி மட்டுமின்றி ஏழு வகை காய்கறிகளால் ஆன கூட்டும் செய்து படைக்க வேண்டும். வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சக்கரவல்லி கிழங்கு, மொச்சை, இது போல் கிடைக்க கூடிய காய்கறிகளைப் போட்டுக் கூட்டாக்கி அமுது படைக்கலாம். இந்த நாளில் மனமுவந்து திருவெம்பாவை பாடி இறைவனை தியானித்தால் அவன் அருள் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.


இன்றைய நாள் சிதம்பரத்தில் மட்டுமல்ல திருவாரூரிலும் மிக விசேஷம். ஆரூராரின் பாத தரிசனம் கிடைக்க கூடிய நாள் இது. வருடம் முழுவதும் தியாகராஜரின் முகத்தை மட்டுமே நம்மால் காண இயலும். அபிஷேக நேரத்தில் கூட அவருடைய மேனி யந்திரத்தால் மறைக்கப்பட்டிருக்கும். திருவாதிரை நாளில் தியாகராஜரின் வலது பாதத்தை தரிசிக்க முடியும்.
அடியும் முடியும் காணமுடியா சிவபெருமானின் பாதத்தை தரிசிக்க வாய்ப்பு நல்கும் இரண்டு நாள்களில் ஓன்று இன்றைய திருவாதிரை. மற்றொன்று பங்குனி உத்திரம். இந்த நாளில் பதஞ்சலி முனிவர் திருவாரூர் தியாகராஜரின் பாதத்தைக் காண எழுந்தருள்வாராம்.

இவ்விழாவிற்கு ஒரு நாள் முன்பாகவே தியாகராஜர் மண்டபத்திற்கு பதஞ்சலி முனிவர் அழைத்து வரப்படுவார். உடன் நீலோத்பலாம்பாளும், அவர் தோழி மற்றும் உற்சவ மூர்த்தியும் இந்த மண்டபத்திற்கு எழுந்தருள்வார்கள். இன்று அதிகாலை திருவாரூர் விளமல் எனும் இடத்தில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் மூலக்கோயிலிலிருந்து யாத்திரை பாதகரை சப்பரத்தில் அழைத்து வந்து ஆரூரரின் பாதத்தை காணச்செய்கிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர்
முன் காலத்தில் முனிவர் மட்டுமே கண்ட இந்த அற்புத தரிசனத்தை இன்று மக்கள் அனைவரும் காணும் வகையில் செய்திருக்கின்றனர். அதிகாலை முதல் மாலை வரை மக்களுக்கு பாதத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. தரிசனம் முடிந்ததும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையின் இருபத்து ஒரு பாடல்களைப் பாடி ஆராதிப்பார்கள்.

அதோடு இன்று தியாகராஜருக்கு பிரசாதமாக இருபத்து ஒரு இனிப்புகள், கனிகள் என அடுக்கி வைத்து அமுது படைப்பர். ஆரூரில் பிறந்தால் முக்தி என்னும் வாக்கு போல் ஆரூருக்குச் சென்று வந்தவரைக் கண்டாலே தியாகராஜரின் அருள் கிட்டும் என்றும் சொல்லுவார்கள். 

வழக்கம் போல் திருவாதிரைத் திருநாளான இன்று திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில், தியாகராஜரின் பாத தரிசனம் காண அதிகாலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து ஆரூர் தேரின் வடம் போல் வரிசைகட்டி நின்று காத்திருக்கிறார்கள். கிழக்குக் கோபுரத்தின் கொடிமரத்திற்கு எதிரே தியாகராஜர் அருள்பாலிக்கிறார். 

இன்று திருவாரூரின் தியாகராஜரை திருவெம்பாவை பாடி ஆராதித்தால் சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும்.

திருவாதிரை விரதம்.!!

திருவாதிரை விரதம்.!!


தில்லை நடராஜருக்கு களி மிகவும் பிடிக்க காரணம் என்ன?

திருவாதிரை விரதம்.!!
 
மார்கழி மாத திருவாதிரை தினத்தில் சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். மாங்கல்யப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.

மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். நாள் முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். 

இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். 

இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான்.

தில்லை நடராஜருக்கு களி மிகவும் பிடிக்க காரணம் :

தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்ய தவறமாட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார்.

ஒருநாள் திருவாதிரை திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் சேந்தனார் தவித்தார். அதனால் வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லை. காட்டிற்கு சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால்தான் அன்றைக்கு உணவு.

அதனால் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று சேந்தனாரும், அவரது மனைவியும் கவலைப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்! சம்போ மகாதேவா... என்ற குரல் கேட்டது. வெளியில் சிவனடியாரை பார்த்ததும் அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள்.

சிவனடியாரின் பசியை போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடைபெற்று சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவரது மனைவியும் ஸ்ரீநடராஜ பெருமானை தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலை திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறி கிடப்பதை கண்டு வியந்தார்கள். சேந்தனாரும், அவரது மனைவியும் இறைவன் முன் களி சிதறி கிடப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்கு களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜ பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள்.

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரை திருநாளில் களி செய்து ஸ்ரீநடராஜ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. எனவே, திருவாதிரை விரதம் மேற்கொண்டு திருவாதிரை களியை உண்பவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா மகிமை

ஆருத்ரா மகிமை


உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே!. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின்
வாயிலாக உலகை இயங்கச் செய்து, ஈசன் திருநடனம் புரிகின்றார். இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது
புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை.

எனவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது’ என்று சொல்லி வைத்தார்கள்.

சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் தனியாக ஆடியது என்றும் புராணங்கள்
தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.

தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.

மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதாகும். இந்த நேரத்தில் காலை கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கையாக கூறப்படுகிறது.

‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்படும்.

பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி
மாத திருவாதிரை தினத்தில் தனது திருநடனத்தை காட்டி, கருணையால் இரு பக்தர்களையும் நனைத்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.

அது என்ன கதை?

ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில்
தென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்தார், ஆதிசேஷன். ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார்.

மகாவிஷ்ணு கூறினார். ‘சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார்ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.

ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார். கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார். அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார்.

அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார். அண்டசராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா என்ன?. சிவனே பேசத் தொடங்கினார்,

‘பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும்
தவம் செய்து காத்திருக்கிறார்.

எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!’ என்று கூறி மறைந்தார்.

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று
தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.

இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று
அழைக்கப்படுகிறது.

எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது
விசேஷமாக உள்ளது.

இன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில்
ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.

தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு.!!

தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு.!!


முழுநிலவும்... திருவாதிரையும் கூடிய நன்நாளில்...
சிவன், பார்வதியின் ஆசியை பெறுவோம்...!!

திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள். 

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க, விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த நோன்பு இருக்கின்றனர்.

திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த மாங்கல்ய நோன்பு (13.01.2025) கடைபிடிக்கப்படுகிறது.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

வழிபாட்டிற்குரிய நேரம் :

இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை

திருவாதிரை களி :

நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து, திருவாதிரை களி, பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பை நிறைவு செய்யலாம். பின்னர் விருந்து சாப்பிட்டு அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

தாலி சரடு :

வழிபாடு மற்றும் விரதத்தை முடித்துக்கொண்ட பிறகு தாலி சரடு மாற்றும் போது கணவர் கையினால் தாலி சரடு கட்டிக்கொண்டு ஆசி வாங்கலாம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.

சிவன், பார்வதியின் ஆசி :

வீட்டில் வடை, பாயாசம், சாதம், சாம்பார், களி என இறைவனுக்கு நைவேத்தியம் செய்யலாம். 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குலதெய்வத்திற்கு படையல் போட்டு வணங்கி அதை கணவருக்கு சாப்பிட படைக்கலாம். 

கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கலாம். இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவன், பார்வதியின் அருள் கிடைக்கும். மேலும், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும்.


ஆருத்ரா தரிசனம் 13.01.2025

ஆருத்ரா தரிசனம் 13.01.2025


ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? 

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லா த பரம்பொருளுக்கு) சிவபெருமா னுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப் படும் நட்சத்திரத்திற்கு வடமொழி யில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரைநட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். 

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

"பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்." என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடரா ஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகி றது. இதனால் சிவ பெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இரு ந்தா ள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலே யே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறி துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்க லாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அம ர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலற லைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்து போன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயு காவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கு ம் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழிமாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்து க்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெ ருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப் படுகிறது.

ஓம் நமசிவாய....
திருச்சிற்றம்பலம்...  


திருவாதிரை களி செய்வது எப்படி.?

திருவாதிரை களி செய்வது எப்படி.?


திருவாதிரை களி செய்வதற்கு முதல் நாள் இரவே ஒரு கப் அளவு பச்சரிசியை நன்றாக கழுவி அதனை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு முதல் நாள் கழுவி காயவைத்த பச்சரிசியை ஒரு கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். அரசி சிவந்து வரும் வரை ஐந்து நிமிடங்கள் நன்றாக வறுத்து கொள்ளவும். அரிசி வறுப்பட்டதும் இதனை தனியாக ஒரு தட்டில் மாற்றி ஆற விட வேண்டும். பிறகு அதே கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு பாசிப்பருப்பு சிவந்து வறுபட்டதும் அரிசியுடன் சேர்த்து ஆறவிட வேண்டும்.

thiruvathirai kali
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்து சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். வெல்லத்தை பாகு போல காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்து வந்தால் போதும். பிறகு நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான வேகத்தில் இல்லாமல் குறைவான வேகத்தில் ரவை பதத்திற்கு இதனை அரைத்து எடுக்கவும்.

நல்ல அடி கனமான பாத்திரத்தில் ஐந்து கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்ல தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து கால் ஸ்பூனிற்கும் குறைவாக உப்பு சேர்த்து இதனை நன்றாக கலந்து விட வேண்டும். இந்த தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து வரும் வரை இதனை கிளறி விட வேண்டும்.

அரிசி ஓரளவு வெந்து வந்ததும் இதனை குக்கருக்கு மாற்றிவிடலாம். ஒரு குக்கரில் அடிப்பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து வேறொரு பாத்திரத்தில் நாம் செய்து வைத்திருக்கும் களியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை மூடி போட்டு இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும். குக்கர் விசில் வந்து அடங்கியதும் இதனை எடுத்து விடலாம். பிறகு ஒரு பேனில் மூன்று மேசை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் விருப்பமான அளவு முந்திரியை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் குக்கரில் வேகவைத்து எடுத்த களியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இதனுடன் மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்து நன்கு கிளறி விடவும். களி ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இதனை இறக்கி விடலாம்...