ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!



_*தைப்பூசம்...*_ 


முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!

தைப்பூச விரத முறையும்... பலன்களும்...!!

தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி  05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!

தைப்பூச விரதம் இருப்பது எப்படி?

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும்.

தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மேலும் மனமுருகி விரதமிருந்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் வழிபடுவது நல்லது. 

தைப்பூச விரத பலன்கள் : 

தைப்பூச நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.

தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் என்பது ஐதீகம்.


முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?



_*தைப்பூச ஸ்பெஷல்....*_


*(05-02-2023)* 

*முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?* 

முருகன், அழகன், குமரன், வேலன், ஆறுமுகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ஆறுபடை வீடுகொண்ட முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபடுகிறார்கள். ஏன் காவடி எடுக்கிறார்கள் தெரியுமா?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விருமலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விருகிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியை தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனை தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர், இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனை தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அதன் காரணமாக பக்தகோடிகள் தற்போது முருகனுக்கு காவடி எடுத்து வந்து வழிபட்டு குமரனை தரிசித்து செல்கின்றனர்.

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை! வேலவனை வேண்டி வாழ்வில் வெற்றி பெறுவோமாக!


தைப்பூசம் ஸ்பெஷல்



தைப்பூசம் ஸ்பெஷல்


அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
  
வள்ளலார் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

தீபத்தையே தெய்வமாகப் பார்க்கிறது சாஸ்திரம். தீப வழிபாடு என்பது நம் பூஜைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தீபத்தில் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்றும் இறைசக்தி வியாபித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அத்தனை பெருமையும் கீர்த்தியும் பெற்ற தீபத்துடன், ஜோதியுடன் ஐக்கியமானவர்... ராமலிங்க அடிகளார்.

வடலூர் பெருமான் என்றும் வடலூர் ராமலிங்க அடிகளார் என்றும் வள்ளல் பெருமான் என்றும் போற்றப்படுகிறார் ராமலிங்க சுவாமிகள்.

இந்த அகண்ட உலகில் மிகப்பெரிய நோயாக, தீராப் பிரச்சினையாக, பிணியாக இருப்பதே பசி. எல்லோர்க்கும் உணவு, எல்லா உயிரினங்களும் பசியாற வேண்டும் என்பதையே லட்சியமாக, குறிக்கோளாக, பிரார்த்தனையாகக் கொண்டவர் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார்.

வள்ளல் ராமலிங்க அடிகளார் அருளிய ஜீவகாருண்யம் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. இவரின் சமரச சன்மார்க்க நெறிமுறைகளும் அஹிம்சையும் மிகப்பெரிய ஆன்மிகச் சிந்தனையை நமக்குள் ஏற்படுத்தின.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என அருளிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார், ’அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்று அருளையும் ஜோதியையும் கருணையையும் நமக்குப் போதித்தார். தான் ஏற்றிய ஜோதியிலேயே, இறை சொரூபமாகத் திகழும் ஒளியிலேயே ஐக்கியமானார் ராமலிங்க சுவாமிகள் என்கிறது வள்ளலார் பெருமானின் சரிதம்.

வள்ளல் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

வள்ளலார் பெருமானை மனதார வழிபடுவோம். தீபத்தில் இரண்டறக்கலந்த ஒப்பற்ற அருளாளரைப் போற்றிப் பிரார்த்திப்போம். வழிபடுவோம். பசிப்பிணி போக்கி அருளுவார். வறுமை நிலையில் இருந்து நம்மை மீளச் செய்வார்.

நோயற்ற வாழ்வைத் தந்து மலரச் செய்வார் ராமலிங்க சுவாமிகள். தைப்பூசத் திருநாளில் ஜோதியில் அருட்ஜோதியெனக் கலந்த மகானைப் போற்றுவோம். வணங்குவோம்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

தருமம் செய்வார் மிக்குள்ள சென்னையி லுள்ள கந்த கோட்டத்துள் வளரும் திருக்கோயிலில் எழுந்தருளும் கந்த வேளே, தண்ணிய முகத்தை யுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாகிய ஆறுமுகங்களை யுடைய தெய்வமணியே, ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும் , உள்ளத்தி லொன்றும் புறத்தி லொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை யடையாவாறு காக்க வேண்டும்; பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும், பொய்ம்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்; பெருமை நல்கும் நெறியையே கடைப் பிடிப்பவனாக அமைய வேண்டுமே யன்றி மத மென்னும் பேயாற் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்; இயல்பாகவே தோன்றுகிற பெண்ணாசையை என் மனம் மறந்தொழியவும், அதற்கீடாக உன்னை மறவா தொழுகும் தன்மை என் நெஞ்சில் நிலை பெறவும் வேண்டும்; மதி நுட்பமும் உன் கருணையாகிய நிதியமும், நோயற்ற வாழ்வும் உடையனாக வேண்டும்; இவற்றை அருளுக. எ.று.

தருமம், ஈண்டுக் கொடை மேற்று. தருமம் செய்வார் மிக்கிருத்தல் தோன்றத் “தருமம் மிகு சென்னை” என்று சிறப்பிக்கின்றார். பல தலைப்படாமல் ஒருதலையாக ஒரு நெறிக்கண் இயங்கும் மனத்தின் நினைவு ஒருமை நினைவாதலால், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்” என்று கூறுகின்றார். “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” என்பர் திருஞான சம்பந்தர். தம்மை உற்றாரையும் ஒருமை நினைவினராக்குவ ரென்பது பற்றி “உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று கூறுகின்றார். நினைவார் மனத்தின்கண் தங்கித் தன் அருளொளியால் மலர்விக்கும் மாண்புடைமை பற்றித் திருவடி யென்றொழியாமல் “நினது திரு மலரடி” எனப் புகல்கின்றார்.

உள்ளத்திலொன்றும் வாயில் ஒன்றும் பேசுபவர் வஞ்சமும் பொய்யும் உடைய தீயராதலின் அவரது உறவு அறவே கூடா தென்றற்கு “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்” எனப் பல சொற்களால் விரியக் கூறுகின்றார். நம் அறிவறியாமே தாமே வந்து கலந்து கொள்பவாதலின், “வஞ்சர் உறவு கலவாமை வேண்டும்” என முருகன்பால் முறையிடுகின்றார். முருகன் புகழ், பொருள் சேர் மெய்ப் புகழாதலின் பேசத்தகுவது என்பது பற்றி, “பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்” என்று கூறுகின்றார்.

“பேசிப் பிதற்றப் பெருமை தருவார்” (பாசூர்) என்பர் திருஞானசம்பந்தர். தலையாய அறமாதலால் “பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்” என எடுத்து மொழிகின்றார். “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. பெருமை தரும் செம்மை நெறி பெருநெறி; அதனைக் கடைப்பிடித் தொழுகல் இன்றியமையாமையால் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும்” என்றும், அதனைக் கெடுக்கும் இயல்புடைமை பற்றி, “மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்” என்றும் கூறுகின்றார்.

உடல் வளரும் போதே உடன் வளர்ந்து அறிவை மயக்குவதனால், “மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்” எனவும், மறக்கத் தக்கது பெண்ணாசையாகிய காமமெனினும் மறவாமைக்குரியது யாதென்றெழும் வினாவிற்கு விடையாக, “உனை மறவா திருக்க வேண்டும்” எனவும் முருகனிடம் வேண்டுகின்றார். பொருள் வாழ்வுக்கு இயற்கையறிவாகிய “மதி வேண்டும்” என்றும், அருள் வாழ்வுக்கு நெறி வழங்குதலின் “கருணைநிதி வேண்டும்” என்றும், உடல் வாழ்க்கை உறுதி பயத்தற்கு “நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்” என்றும் இயம்புகின்றார்.

இதனால், ஒருமை நினைவுடைய உத்தமர் உறவு முதல் நோயற்ற வாழ்வு ஈறாக வுள்ள நலம் பலவும் வேண்டுமென முறையிட்டவாறாம்.  

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.


தைப்பூச திருவிழா



தைப்பூச திருவிழா* 
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்...!

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். 

தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. 

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும்.

அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.

இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் 
வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். 

*வரலாறு* 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.
எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.
அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். 

எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். 

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.

*அலகு குத்துதல்* - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

*சர்க்கரை காவடி -* சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

*பறவைக் காவடி -* அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

*பால் காவடி -* பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

*மச்சக்காவடி* - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

*மயில் காவடி* - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது

வடலூரில் (இந்தியா) தைப்பூசம்
கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 

வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.. காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

ஈழத்தில் தைப்பூசம்
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். 

அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

வெளிநாடுகளில் தை பூசம்
மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும்.

இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம்.

மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள்.

தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும்.

நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு.

சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
பினாங்கு தைப்பூசம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள்.

இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .

சிங்கப்பூரில் தைப்பூசம்
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். 

இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். 

மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள்.

காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

ஆஸ்திரேலியாவில் (விக்டோரியா) தைப்பூசம்
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு.

சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள்.
பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.மிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்த தைப்பூசத் திருநாளில் குமரன் அருள் பெற்று மகிழ்வோம்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும்.

இந்த திருநாளில் முருகனின் கோவிலை நாடிச் சென்று வழிபடுவோம். முருகனின் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாக பெறுவோம்.

தைப்பூசத்தன்று சிவாலயங்களுக்கு சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சந்தோஷ வாழ்வை பெறலாம்.

தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்



 தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்
*(இன்று தைப்பூசம் 5.2.2023)*

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர் கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.

10. முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங் களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான். 

16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச் சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே.

26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

35.திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப் பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.

39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத்துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதிவழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள்.