திங்கள், 13 ஜனவரி, 2025

சர்க்கரை பொங்கல் செய்வதற்கான ரெசிபி

பொங்கல் பானையில் ருசி மிகுந்த சர்க்கரை பொங்கல் செய்வதற்கான ரெசிபி


சர்க்கரை பொங்கல் இன்றி பொங்கல் பண்டிகை தித்திப்பாக அமையாது. பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் பொங்கப் பானை வைத்து அரிசி, வெல்லம் போட்டு தயாரிக்கும் சர்க்கரை பொங்கலின் ருசியும், மனமும் தனித்துவமானது. இந்த பதிவில் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி பார்க்கலாம்...

பொங்கல் பண்டிகையைத் தித்திப்புடன் கொண்டாடி மகிழ அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் சமைப்பது இயல்பே. சிலருக்கு சர்க்கரை பொங்கல் ருசிக்க வேண்டும் என ஆசை இருக்கும் ஆனால் அதை எப்பது சரியாக சமைப்பது என தெரியாது. குழைந்து விட்டால் சர்க்கரை பொங்கலின் ருசி போய்விடும். எனவே சர்க்கரை பொங்கல் தயாரிப்புக்கான பொருட்களை எந்த அளவுகோளில் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.


சர்க்கரை பொங்கல் செய்யத் தேவையானவை

பச்சரிசி
பாசி பருப்பு
தண்ணீர்
நெய்
பால்
பாகு வெள்ளம்
முந்திரி
லவங்கம்
ஏலக்காய்
சாதிக்காய்
உப்பு
திராட்சை


சர்க்கரை பொங்கல் செய்முறை

முதலாவதாக 200 கிராம் பிடிக்கும் கப் ஒன்றில் பச்சரிசி முழுவதுமாக எடுத்துக் கொள்ளவும்
அடுத்ததாக பச்சரிசியுடன் சேர்த்து சமைப்பதற்கு 50 கிராம் பாசி பருப்பை எடுத்துக் கொள்ளவும்
இவை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் நான்கு முறை நன்கு கழுவவும். ஏனென்றால் அரிசியில் இருக்கும் தூசி, அதைப் பாலிஷ் செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ரசாயனம் எதுவாக இருந்தாலும் அது சமைக்கும் முன்பாக நீக்கப்பட வேண்டும்
தற்போது ஒரு பெரிய குக்கரில் கழுவிய பச்சரிசி மற்றும் பாசி பருப்பை போடவும். இதில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றுங்கள்.
இதன் பிறகு பச்சரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் அரை கப் பால் எடுத்து குக்கரில் ஊற்றவும்
மீண்டும் அதே கப் கொண்டு நான்கு முறை தண்ணீர் எடுத்து குக்கரில் சேர்க்கவும்
மிதமான சூட்டில் வைத்து ஆறு முறை விசில் அடித்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்
தற்போது அரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் இரண்டு முறை பாகு வெள்ளம் எடுத்துக் கொள்ளவும்
நாம் பாகு வெள்ளத்தை தேர்ந்தெடுக்க காரணம் சர்க்கரை பொங்கலின் நிறத்திற்காகவும் அதன் தனித்துவமான சுவைக்காகவும்
இதன் பின்னர் ஒரு பேனில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் கொதித்த பிறகு பாகு வெள்ளத்தை போடவும்
இரண்டு நிமிடங்களில் பாகு வெள்ளம் உருகத் தொடங்கி அதில் இருக்கும் அழுக்கு, தூசி ஆகியவை வெளியேறிவிடும்
இதற்கு ஒரு வடிகட்டி பயன்படுத்திய பிறகு மீண்டும் ஆறு முதல் ஏழு நிமிடங்களுக்கு பாகு வெள்ளத்தை உருக்கவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
தற்போது ஒரு பெரிய கடாயில் ஏழு டீஸ் ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடான பிறகு மூன்று லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும்
முந்திரி பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி - பாசி பருப்பை மொத்தமாக கடாயில் சேர்க்கவும்.
தற்போது ஒரு பெரிய கடாயில் 7 டீஸ் ஸ்பூன் நெய் ஊற்றி, 3 லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும்
அது சற்று பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை கடாயில் மொத்தமாக சேர்க்கவும்
நெய்யுடன் நன்றாகக் கலக்கும்படி கிண்டிவிட்டு காய்ச்சி வைத்திருக்கும் வெள்ளைப் பாகை ஊற்றுங்கள்
ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்கு இதனை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சாதிக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
50 விழுக்காடு சமைத்த பிறகு மூன்று ஸ்பூன் சேர்க்கவும், அதே போல 90 விழுக்காடு சமைத்த பிறகு ஒன்றரை ஸ்பூன் நெய் சேர்க்கவும்
இறுதியாக ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து, சர்க்கரை பொங்கலை அடுப்பில் இருந்து எடுத்தபிறகு சேர்க்கவும்.
அவ்வளவு தான் பொங்கல் பண்டிகையைத் தித்திப்பாக்கிடும் சர்க்கரை பொங்கல் தயார்.

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் கிராமங்கள்!.

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் கிராமங்கள்!.


தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும்.

தைத்திருநாள், தமிழர் திருநாள், தைப் பொங்கல், சூரிய பொங்கல்“ என அனைத்துப் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தான் தை முதல் நாள் கொண்டாடக்கூடிய பொங்கல் திருநாள். தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைகளை உலகின் எங்கு இருந்தாலும் நாம் சிறப்பாக கொண்டாடி விடுவோம். ஆனால் தைப் பொங்கல் என்றாலே நகரத்திலிருந்து கிராமத்திற்குத் தான் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும். ஆம் உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகைகளை அங்கு கொண்டாடுவதில் எவ்வித தவறும் இல்லை. குறிப்பாக கிராமத்தில் பொங்கலுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் களைக்கட்டும். வீட்டிற்கு வெள்ளையடிப்பது முதல் புத்தாடைகளை வாங்குவது என பொங்கலுக்கு ஏற்பாடுகள் தயாராகும்.

நாம் எந்த பண்டிகைகளைக் கொண்டாடினாலும், முதலில் கோலங்களில் இருந்தது தான் ஆரம்பிப்போம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்றவாறு கோலங்கள் போட வேண்டும் என்ற தேடல்கள் இருக்கும். அதிலும் கிராமத்துக் கொண்டாட்டங்களில் பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு என்ன கோலங்களை வாசலில் போடலாம் என்ற தேடலில் இருப்பார்கள். இதே மட்டுமின்றி பொங்கலுக்கான பராம்பரிய சேலைகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். மேலும் வீடுகளில் உள்ள பெண்கள், தேவையில்லாத பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வாசல்களில் மாவிலைத் தோரணங்கள், மஞ்சள் மற்றும் அம்மங்காப்பு செடிகளைத் தோரணமாக கட்டுவார்கள்.

பழங்காலத்தில் கிராமத்துப் பொங்கல்:

இன்றைக்குத் தான் கிராமத்திலும் வீடுகளின் அமைப்பு மாறிவிட்டது. மார்பிள், டைல்ஸ் கற்கள் பதித்த மாடி வீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டது. ஆனால் முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும்பாலும் வீடுகள் குடிசைகளாகத் தான் இருக்கும். இதனால் தான் ஆண்டிற்கு ஒருமுறை அதை புதுப்பிப்பார்கள். மண் தரை என்பதால் சாணம் மற்றும் கரம்பை மண் சேர்த்து மொழுகி அழகுப்படுத்துவார்கள்.

மேலும் சுண்ணாம்பு பால் கொண்டு வீட்டு திண்ணையில் விதவிதமாக சிக்கு கோலம் போடுவார்கள். அதிலும் இந்த சிக்கு கோலத்திற்கும் பெண்களின் வாழ்க்கையும் தொடர்பு இருக்கிறதாம். வளைவு நெளிவுகளையும், சிக்கல்களையும் சமாளித்து எப்படிகோலமிடுகிறார்களோ? அதைப் போன்று குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளிக்கும் திறன் பெண்களிடம் உள்ளது என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி வீடுகளில் உள்ள பழைய துணிகள் மற்றும் பொருள்களையெல்லாம் அப்புறப்படுத்தி கிராமத்து மத்தியில் வைத்து எரிப்பார்கள். மேலும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடுகள். கிராமம் என்றாலே மாடுகள் இல்லாமல் இருக்காது. மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாடுகளைக் குளிக்க வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, கலர் பொட்டிட்டு தங்களது குழந்தைகள் போன்று பராமரித்துப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இதோடு மட்டுமின்றி கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டிகள் வைத்துக் கொண்டாடுவார்கள். மேற்கூறியுள்ள பழக்கங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டாலும், இன்னமும் சில கிராமங்களில் ஊரே சேர்ந்து விதவிதமான போட்டிகளை வைத்துக் கொண்டாடும் வழக்கத்தில் உள்ளனர். ஊர் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இதற்காக வரி போட்டு பொங்கல் திருவிழாவை 3 நாள்களும் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

வருகின்ற இந்த தைத்திருநாளை நீங்களும் வயல்வெளிகளில் இயற்கையோடு இயற்கையாக கிராமங்களுக்குச் சென்று கொண்டாட முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு புது அனுபவமாக உங்களுக்கு இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்!

தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்!

கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பார்த்து சொல்லடியோ, ....போடா எல்லாம் விட்டு தள்ளு பழச எல்லாம் விட்டு தள்ளு” என்ற பாடல்கள் தான் தை திருநாள் ஆரம்பித்தாலே நமது காதுகளை இனிமையாக்கும். இவற்றைக் கேட்டாலே நம்மை அறியாமலே மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதிக்கும். இந்த சந்தோஷத்தோடு நம்முடைய உழவர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளுவோம். இதில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் வைப்பதற்காக வாங்கப்படும் பானைகள்.

முன்பெல்லாம் நாம் மண்பானைகளில் தான் பொங்கல் வைப்போம். ஆனால் இன்றைக்கு அனைவராலும் பின்பற்ற முடியவில்லை. சிலர் மட்டுமே அதைப் பின்பற்றி வருகின்றோம்.. அதே சமயம் இதற்கு மாற்றாக பித்தளை பானைகள் தான் பொங்கலில் பிரதானமாக அமைகிறது. புதுமணத்தம்பதிகளுக்கு தாய் வீட்டு பொங்கல் சீர் கொடுப்பதற்காக மற்றும் வீடுகளில் பொங்கல் வைப்பதற்காக ஆர்வத்துடன் பித்தளை பானைகள் வாங்குவதைப் பார்த்திருப்போம். இதற்காக உங்களது ஊர்களில் பொங்கல் பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இருந்தாலும் நாம் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பானைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து தற்போது அறிந்துக் கொள்வோம்.

கும்பகோண பித்தளை பாத்திரங்கள்

கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.. தலைமுறை தலைமுறையாக கும்பகோணத்தில் தாராசுரம், நாச்சியார் கோவில், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, திருநாகேஸ்வரம், அண்ணலக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங்கள் பித்தளைப் பாத்திரங்களைத் தயார் செய்து வருகின்றனர். விதவிதமான டிசைகளில் , நல்ல தரத்துடன் செய்யப்படும் இந்த பித்தளை பாத்திரங்கள் தான் பொங்கலில் தனிச்சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில் பித்தளைப் பாத்திரங்கள் விற்பனை செய்தாலும் இந்த கும்பகோணம் தாராசுரம் பாத்திரத்திற்கென்று தனி மவுசு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பானைகள் விற்பனைக்குகொண்டு வரப்பட்டாலும், தஞ்சை, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், உள்ளிட்ட பல சோழ நாடுகளில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

உழவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தை திருநாளை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே பானைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீர் கொடுப்பது ஐதீகம் என்பதால் விதவிதமான மற்றும் புதிய டிசைன்களில் வரக்கூடிய பானைகளை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த பானைகள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பொங்கல் பண்டிகைக்காக இரவு,பகல் பாராமல் தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!

போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!


பழையன கழிதலும், புதியன புகுதலுமாய் கொண்டாடப்படும் போகி பண்டிகையின் சிறப்புகள் நிறைந்த வரலாறு இங்கே உங்களுக்காக...

தமிழர்களுக்கு மார்கழி மற்றும் தை வந்தாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இல்லை. மார்கழி 30 நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலுக்குச் செல்வார்கள். குளிர்காற்றாக இருந்தாலும் இந்த மாதத்தில் சுத்தமான ஆக்ஸிஜனை நாம் பெற முடிகிறது. இவ்வாறு 30 நாள்களும் பழங்காலம் முதல் ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகவே இருந்து வருகிறது. இந்த மாதம் முடிவடையும் நேரத்தில் தான் தைத்திருநாள்களுக்கான முதல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளும், மார்கழியின் இறுதி நாள் தான் தமிழர்களால் போகிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதோ அதற்கான வரலாறுகள் இங்கே உங்களுக்காக...

போகிப்பண்டிகையின் வரலாறு:

இன்பத்தைக் குறிக்கும் சொல் தான் போகி.. இதுவரை எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அதை அனைத்தையுமே மறந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை முன்னிறுத்தும் பண்டிகையாக போகி விளங்குகிறது. தைத்திருநாள் என்பது உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள் தான்.அதே சமயம் இவற்றை எப்போதும் செழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால் மழை அவசியமான ஒன்று இல்லையா? உழவர்களுக்கு விவசாயம் செய்கின்ற நேரத்தில் மழையைத் தருகின்ற இந்திர பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாளாகப் பார்க்கப்படுவதாக சில வரலாறுகள் கூறுகின்றனர்.

மேலும் இதுவரை கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும் மறந்து தமிழர்களின் புத்தாண்டு தினமாக தை மாதத்தில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். இதோடு போகிப் பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் இருக்கக்கூடிய பழைய பொருள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவார்கள். முன்பெல்லாம் பழைய பொருள்களையெல்லாம் ஒன்று திரட்டி எரிப்பதோடு, மோளம் கொட்டி உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். இந்த உற்சாகமே மனதில் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்துமே தூக்கி எரிய செய்துவிடும்.

வீட்டில் உள்ள பழைய பொருள்களை மட்டுமில்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எறிய வேண்டும் என் நம் முன்னோர்கள் சொல்லும் கதையும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிற்கு வண்ணமடித்து, மண் வீடுகளுக்கு சாணம் போட்டு மொழுகுவார்கள். பழைய பொருள்கயையெல்லாம் எரித்துவிட்ட பின்னதாக வீட்டிற்குத் தேவையான பதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள்.

தைத்திருநாள் மட்டுமில்லாது போகி பண்டிகையன்றும் சில இடங்களில் பொங்கல் வைப்பதும் வழக்கம். மேலும் இனிப்பு,வடை, பாயாசம் போன்றவற்றையும் தங்களுடைய நிலத்தில் விளைந்த சிறுதானியங்களையும் சமைத்துப் படையலிடுவார்கள். பொங்கல் பண்டிகையில் எப்படி சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கிறோமோ? அதுப்போன்று தான் இந்த போகிப்பண்டிகையில் நிலத்திற்கு நன்மைப் பயக்கும் மழைக்கு நன்றி தெரிவிக்கின்றனர் மக்கள். இதோடு தங்களுடைய நிலங்கள் மற்றும் வீடுகளில் அம்மங்காப்பு செடிகளை வைப்பதும் வழக்கம்.

நீங்களும் இந்த போகிப்பண்டிகையில் தீயவற்றை மறந்து புதிய விஷயங்களோடு உங்களது பொங்கலைக் கொண்டாடுங்கள்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்!

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்! 



தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட எதுவும் திட்டம் உள்ளதா? இதோ உங்களுக்காகவே தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் நிறைந்த சிறந்த இடங்கள் என்னென்ன? என்பது குறித்து நீங்களும் இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்ற டூரிஸ்ட் ஸ்பார்ட்!

மதுரை:

பொங்கல் திருநாள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வரக்கூடிய இடம் என்றால் நிச்சயம் மதுரையாகத் தான் இருக்க முடியும். வீரர்களையும், காளைகளையும் பெருமைப்படுத்தக்கூடிய ஜல்லிகட்டு போட்டிகளைக் காண்பதற்காகவே ஏராளமான மக்கள் இங்கு வருகை தருவார்கள். உங்களது குழந்தைகளுக்கு பராம்பரியத்தைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்றால் மதுரை உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும். ஜல்லிக்கட்டு குறித்து வரலாறுகளையும் உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கவும் நல்ல வாய்ப்பாக அமையக்கூடும்.

ஒருவேளை உங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லாம். இதோடு மட்டுமின்றி தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பொங்கல் சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொள்ளும். குறிப்பாக கிராம பயணங்கள், பரதநாட்டியம், கரகாட்டம் என தமிழர்களின் பண்டைய நாகரிகம் போன்றவற்றை நாம் அறியக்கூடிய வகையில் இந்த பயணங்கள் அமையக்கூடும்.

தஞ்சாவூர்:

மதுரையையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சிறந்த இடம் என்றால் அது தஞ்சாவூர் தான். நெல் விளைச்சலுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூரில் உழவர்கள் மிகவும் விமர்சியாக தை திருநாளைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு கிராமங்களிலும் விதவிதமான அலங்காரங்கள், வண்ணமயமானக் கோலங்கள் மற்றும் பராம்பரிய முறைகள் அனைத்தையும் இவ்விழாவில் இடம் பெறும். எனவே நீங்கள் பொங்கல் குறித்த புதிய அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் தஞ்சாவூர் செல்லுங்கள்.


இதோடு மட்டுமின்றி மாட்டுப்பொங்கல் தினத்தன்று புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு கோயிலில் பூஜைக்காக உரிமையாளர்கள் பல பசுக்களை வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போதே நமது கண்களுக்கு விருந்தாகவே அமையும். மேலும் இத்திருவிழாவில் கிராமப் பயணம், பாராம்பரிய விளையாட்டுகள், மாட்டு வண்டி பந்தயம், நாட்டுப்புற நடனங்கள் அனைத்தும் தஞ்சையில் பல கிராமங்களில் நடைபெறும்.

சேலம்:

தை திருநாளை என்றாலே உழவுக்கு உறுதுணையாக இருக்கும் காளைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக உள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக நரியைக் கடவுளாக வணங்குகின்றனர் மக்கள். கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நரியை ஊர்வலமாக வீதிகளில் மேளதாளத்துடன் கொண்டுவருகின்றனர். பெண்களும் ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள. தை மாத்தில் புதிய விளைச்சல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நரி முகத்தில் விழித்தால் நல்ல யோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நரி முகத்திருவிழா நடைபெறுவது இங்கு வழக்கமாக உள்ளது. தைத்திருநாளில் புதிய அனுபவத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால் சேலத்திற்கு கொண்டு கொஞ்சம் சென்று வாருங்கள்.

கோவை:

கொங்கு மண்டலமான கோவையில் ரேக்ளா ரேசுடன் தைத் திருநாள் கோலாகலமாக நடைபெறும். பண்டிகைக்காலத்தில் ஆடைகள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு சிறந்த தேர்வாக கோவை கண்டிப்பாக அமையக்கூடும். கோயம்புத்தூர் வருகையின் போது அழகிய கோயில்கள் மற்றும் பாரம்பரிய கிராமங்களுக்குச் சென்று பொங்கலின் போது கிராமிய வசீகரத்தையும் துடிப்பான பண்டிகையையும் அனுபவிக்கலாம்.

பொள்ளாச்சி:

மண்ணின் மணம் மாறாத பொள்ளாட்சி பொங்கல் பண்டிகையைக் கொண்ட சிறந்த இடமாக அமைகிறது. இங்குள்ள சுற்றுச்சூழல் உங்களது மனதை இனிமையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க கண்டிப்பாக உதவக்கூடும்.

தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!

தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!


வாழ்க்கையில் ஏற்பட்ட கவலைகளெல்லாம் மறந்துவிட்டு இனிப்புகளோடு உங்களது புதிய பயணத்தைத் தொடங்குங்கள் என கரும்பின் சுவை உணர்த்துகிறது.

வேளாண்மைக்கும், வேளாண் தொழிலுக்கும் உறுதுணையாக இருந்த காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் கொண்டாடக்கூடிய பாரம்பரியமான விழா என்றால் அது தைப்பொங்கல் தான். மார்கழி கடைசி போகி பண்டிகை, தை முதல் நாள் தை பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாள்களும் உழவர்களுக்கான திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆம் முன்பெல்லாம் உழவுத்தொழில் தான் பிரதானமாக இருந்துள்ளது. ஆடி பட்டத்தில் தேடி விதைத்த பயிர்கள் அனைத்தும் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதாவது மார்கழி கடைசியில் உழவர்கள் அறுவடையை மேற்கொள்வார்கள். இதையடுத்து வேளாண்மை தொழிலுக்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாட்டங்களை அவர்களுக்கு ஏற்றவாறு வகுத்துக் கொண்டனர்.

தை முதல் நாள் உழவுக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பின்னர் காளைக்காக மாட்டுப்பொங்கல் வைத்து வழிபடுவார்கள். என்ன தான் இத்திருநாளில் சர்க்கரை பொங்கல் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் கரும்பிற்கும் தனி இடம் உண்டு. ஏன் பொங்களன்று கரும்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? என்ன காரணம்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே…

பொங்கல் தினத்தில் கரும்பின் முக்கியத்துவம்:
மேலும் படிங்க:தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்!

இனிப்பின் அடையாளமாக விளங்குகிறது கரும்பு. உழவர்கள் பயிரிடப்பட்ட கரும்பை 10 மாதங்களுக்குப் பிறகு மார்கழியில் தான் அறுவடை செய்வார்கள். நான்கு நாள்கள் பண்டிகைகளிலும் இது பிரதானமாக இருக்கும். இதுவரை வாழ்க்கையில் பட்ட துயரங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இனிப்புகளோடு உங்களது புதிய பயணத்தைத் தொடங்குங்கள் என கரும்பின் சுவை உணர்த்துவதாக நம் முன்னோர்கள் தெரவிக்கின்றனர்.
மேலும் நாம் சாப்பிடக்கூடிய கரும்பில் நுனிக்கரும்பை விட அடிக்கரும்பு தான் அதிக சுவையைக் கொடுக்கும். ஆனால் இதை எளிமையாக சாப்பிட்டு விட முடியாது. சில இன்னல்களையும் நாம் சந்திக்க நேரிடும். இதுப்போன்று தான் வாழ்க்கையும். எனவே எந்தவித இன்னல்கள் வந்தாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதுப்போன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் கரும்பில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே விதவிதமான உணவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. போட்டி போட்டுக்கொண்டு உணவுகளை உட்கொள்வோம். சைவம் மற்றும் அசைவ உணவுகள் அனைத்துமே பொங்கல் திருநாளன்று இடம் பெறும். இதனால் சில நேரங்களில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் நாம் சாப்பிடும் கரும்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலின் செரிமான அமைப்பை சீராக்குவதற்கும் உதவியாக உள்ளது.

இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள கரும்புகள் தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல்,பொள்ளாச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும்.