திங்கள், 16 டிசம்பர், 2024

இன்றிலிருந்து மார்கழி ஆரம்பம் என்பதால் வீட்டில் தினமும் திருவெம்பாவை படிக்க ஆரம்பிப்போமா!

இன்றிலிருந்து மார்கழி ஆரம்பம் என்பதால் வீட்டில் தினமும் திருவெம்பாவை படிக்க ஆரம்பிப்போமா!



மார்கழி மாதத்தின்
(30)முப்பது நாட்களிலும் பட வேண்டிய திருவெம்பாவை பாடல்கள்!

மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பதிகம் திருஅண்ணாமலையில் அருளியது,மற்றும் திருப்பள்ளியெழுச்சி பதிகம் திருப்பெருந்துறையில் அருளியது. 

கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை. 

மாணிக்கவாசக சுவாமிகள் திருஅண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம் திருவெம்பாவை பாடல்களாகும்.

திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது சைவர்களின் மரபு.

இந்த இரண்டு பதிகங்களும் மணிவாசகர் அருளிய திருவாசகத்தில் இடம் பெறுகின்றன. 

சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம். 

ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்ற தொடரை, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்லாக சிலர் கருதுகின்றனர்.

சிலர், பாவை போன்ற பெண்ணே, நீ சிந்திப்பாயாக என்று பொருள் கொள்கின்றனர்.

இந்த பாடல்களில் பல தத்துவக் கருத்துகள் புதைந்து கிடைக்கின்றன. 

இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய பாடல்களை இந்த மார்கழி 
மாதத்தின் முப்பது(30) நாட்களிலும் நாமும் பாடி இறையருள் பெறுவோமா?.

மாணிக்கவாசகரின் இந்த திருவெம்பாவை முப்பது (30)பாடல்களை எனது நண்பர்களுக்காக மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் தொடர்ந்து பதிவிட இருக்கின்றேன்.

  மார்கழி மாதத்தின் 
முதல் நாள் பாட வேண்டிய திருவெம்பாவை பாடல் 1

 🌹ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

 🌹பொருள்: 

வாள் போன்ற நீண்ட கண்
களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.

🌿🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

கிருஷ்ண பரமாத்மா கீதையில் மாதங்களில் நான் மார்கழியாவேன்

மார்கழி மாத சிறப்பு பதிவு:


மனிதனை உயர்வழிக்கு அழைத்துச்செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும். அந்த நிலையில் மார்கழி மாதம் , இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத் துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக இன்பமூட்டுவது இயல்பே. நாள் விடிவதென்றால் நம் கணக்கில் ஆண்டு பிறப்பதேயாகும்.

மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது. எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

வருடத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

தமிழகத்தின் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.

சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும். “இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…” என்று பரிபூரணமாக நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. 

இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும்.

 கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும்.

 கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

எனவே குளிர் அதிகமுள்ள இந்த மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு பின்பும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிராமல், அதிகாலை எழுந்து கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்து பலன் பெறுவோம்.

 அதிகாலை எழுந்திருப்பதே கஷ்டமான காரியம். அதுவும் குளிர்காலத்தில் இது மிக மிக கஷ்டம் தான்.

 ஆனால் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் இதை விட இனிமையானது வேறு எதுவும் இல்லை.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை



மார்கழி மாதம் பிறப்பையொட்டி நாளை அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஒருமாதம் வரை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்கும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, ஏழுமலையானை துயில் எழுப்புவது ஐதீகம். இந்த திருப்பாவை சேவை இந்த ஆண்டு நாளை அதிகாலை முதல் தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மார்கழி மாதம் 16-ம் தேதி காலை 6.57 மணிக்கு பிறந்தது. அதற்கு முன்னதாக சுப்ரபாதம் பாடப்பட்டது. மறுநாள் 17-ம் தேதி முதல் திருப்பாவை சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராக போற்றி புகழப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை பாடப்படும்.

மேலும், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் இரவு நடக்கும் ஏகாந்த சேவையில் போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பதில் ஸ்ரீ கிருஷ்ணரே இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோயில்!

தேரி அய்யனார் அருளால் வியாபாரம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!



தேரிக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோயில்!

முற்காலத்தில், தேரிக் குடியிருப்பையும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளையும் அதிவீரணசூர பாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஐய்யனார் மானிட உருவம் எடுத்து, மன்னருக்கு ஆலோசனை கூறும் அமைச்சராக இருந்தார்.

மன்னரின் கோட்டைக்கு அருகில் இருந்த சுனையில் (ஊற்றில்) இருந்து சுரக்கும் தண்ணீரைத்தான் குடிநீராகப் பருகி வந்துள்ளனர். இந்த ஊற்றுப் பகுதியில் ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு காய் மட்டுமே காய்த்துப் பழமாகுமாம். சுனையில் தானாக விழும் அந்த மாம்பழத்தைச் சாப்பிடுபவருக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கும் என்பதால், அந்தப் பழத்தைக் காவல் காக்க, மாமரத்தைச் சுற்றிலும் காவலாளிகளை நிறுத்திவைத்திருந்தார் மன்னர்.

அந்த ஊரில், ஆண்கள் கண்களில்படாமல் ஒரு விதவைப் பெண் தனியாக வசித்து வந்தாள். பொழுது சாயும் நேரத்தில் மட்டும் சுனைக்கு வந்து தண்ணீர் பிடித்துச் செல்வது வழக்கம். அப்படி வழக்கம்போல் தண்ணீர் பிடிக்க வந்தபோது, மரத்தில் இருந்த பழம் உதிர்ந்து, அந்தப் பெண்ணின் குடத்தில் விழுந்துவிட்டது. இது தெரியாத அந்தப் பெண், வீட்டுக்குச் சென்று குடத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் மரத்திலிருந்த பழத்தைக் காணாததால், மன்னரின் உத்தரவுப்படி விதவைப் பெண்ணின் வீட்டைத் தவிர மற்ற எல்லா வீடுகளிலும் காவலாளிகள் சோதனை போட்டும் பழம் கிடைத்த பாடில்லை. இறுதியாக விதவைப் பெண்ணின் வீட்டில் சோதனை போடும்போது குடத்துக்குள் கிடந்த மாங்கனியை எடுத்து மன்னரிடம் கொடுத்தனர் காவலாளிகள். அந்தப் பெண்தான் மாம்பழத்தை எடுத்துச் சென்றுவிட்டாள் என்று நினைத்த மன்னர், அவளை முறைப்படி விசாரிக்காமல், அந்தப் பெண்ணுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, எருக்கம்பூ மாலை போட்டு, சுண்ணாம்புக் காளவாயில் போட்டு எரிக்கும்படி உத்தரவிட்டார்.

மன்னருக்கு அமைச்சராக இருந்த ஐயனார், ‘`அந்தப் பெண்மீது தவறில்லை. தனக்கே தெரியாமல் குடத்துக்குள் மாங்கனி விழுந்ததற்கு இவள் எப்படிப் பொறுப்பாவாள்? மன்னா, இந்த உத்தரவைத் திரும்ப பெற வேண்டும்’’ என்று மன்னரிடம் கூறியும் அதைக் கேட்காத மன்னர், தண்டனையை நிறைவேற்றினார். ஆராயாமல் தனக்கு அநீதி இழைத்த மன்னரின் செயலால் கோபம்கொண்ட அந்தப் பெண், ‘`நின்று நிலைத்து நீதி கேட்காதவன் சீமையில் தீக்காற்றும் தீ மழையும் பெய்யக்கடவது...’’ என்று சாபமிட்டாள். உத்தமியின் சாபம் அல்லவா? உடனே மன்னரின் கோட்டையும் ஊரும் தீக்கு இரையாகிவிட்டது. ஐயனார் மட்டும் தன் தெய்வ சக்தியினால், அருகிலிருந்த கருக்குவா மரத்தில் ஐக்கியமாகி விட்டார். பிற்காலத்தில் மக்களுக்கு அருள்புரிய திருவுள்ளம்கொண்டு, கருக்குவா மரத்திலிருந்து தோன்றினார். கருக்குவா மரத்திலிருந்து தோன்றிய தால், ‘கற்குவேல் கையனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

முற்காலத்தில் ஐயனாருக்கு, ‘கையனார்’ என்றே பெயர். கற்குவேல் கையனார் என்ற பெயரே காலப்போக்கில் மருவி, கருக்கு வேலய்யன், கருக்கோல ஐயன், கருக்குவாள் ஐயன், கருக்குவாலை ஐயன் என்றெல்லாம் அழைக்கப் பட்டு, தற்போது, ‘கருக்குவேல் ஐயனார்’ என்று அழைக்கப்படுவதாக விரிகிறது ஐயனார் கோயில் தல வரலாறு. இப்பகுதி கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் ‘கருக்கு வேலைய்யன்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.



ஐயனாரின் அழகுத் திருக்கோலம்!

ஐயனார் எழுந்தருளியுள்ள கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடக்கியபடி கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். ஐயனாரின் வலது கையில் நீதி நெறியை அறிவிக்கும் தருமச்செண்டு உள்ளது. ஐயனாருக்கு வலப்புறம் பூரணம்மாள், இடப்புறம் பொற்கமலம்மாள் ஆகியோர் காட்சியளிக் கின்றனர். பொற்கமலம்மாளை ‘புஷ்கலையம்மாள்’ எனவும் அழைக்கின்றனர். கருணை ததும்பும் இரு விழிகளும் தரிசிப்பவர்களைக் கவரும் வண்ணம் திகழ்கின்றன. கூரிய நீண்ட மூக்கும், இருபுறமும் மடிந்த காதுகளும், இதழ்களில் நெளியும் புன்னகையும், ஜடாமுடியும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் அருள்காட்சி தருகிறார் ஐயனார்.

கள்ளர் வெட்டுத் திருவிழா!

முற்காலத்தில் வடதிசையிலிருந்து, மந்திர சக்தி படைத்த கள்வன் ஒருவன், கற்குவேல் ஐயனார் கோயிலில் உள்ள பொருள்களைக் களவாடிச் செல்வதற்காக வந்தான். அவன் தன் மந்திர சக்தியைப் பயன்படுத்திப் பொருள்களைக் கொள்ளையடித்த நிலையில், அவனை முன்னடியானும் பட்டவராயனும் பிடித்து, ஐயனாருக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினர். ஐயனார், அந்தக் கள்வனைச் சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிட்டாராம். அதன்படி முன்னடியான், பலவேசக்காரன், வன்னியராஜா ஆகியோர் கள்வனைக் கட்டி இழுத்துக்கொண்டு சென்று, தேரிக் காட்டில் வைத்துச் சிரச்சேதம் செய்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் ‘கள்ளர் வெட்டுத் திருவிழா’ விசேஷமாக நடைபெறுகிறது.

கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் சுத்த விரதம் இருப்பார்கள். கோயிலில் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலையும் மாலையும் வில்லிசையில் ஐயனாரின் கதை படிக்கப்படும். மாதத்தின் கடைசி மூன்று நாள்களில்தான் திருவிழா சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் 28-ம் நாள் ஐவரராஜாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 29-ம் நாள் ஐயனார், பேச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

எடுப்பெடுத்தல்!

30-ம் நாளில்தான் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலையில் கோயில் பூசாரிகள் 11 பேர், திருக்கோளூருக்குச் சென்று தாமிரபரணி நதியிலிருந்து 11 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெண்கள் பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருவார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறும். மதியம் 3 மணிக்கு கள்ளர்சாமி ஆடும் கோமரத்தாடி (சாமி ஆடும் நபர்), கள்ளர்சாமி சந்நிதிக்கு முன்பு செல்வார். அவருக்குக் கருங்கச்சை, சல்லடை, குல்லா அணிவித்து அவருடைய கையில் ஐந்து மணி வல்லயம் கொடுத்து, மேளம் கொட்டப்பட்டு அருள் ஏற்றப்படும். அருள்வந்த கள்ளர்சாமி, கையில் ஒரு பெரிய ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழம், வெற்றிலை, தின்பண்டங்கள், பலகாரங்கள், விளையாட்டுச் சாமான்கள், பூஜைப் பொருள்கள் என்று கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் களவாடிக் கொண்டு அருளோடு ஓடி வருவார். இப்படி கடைகளில் பொருள் எடுப்பதை ‘எடுப்பெடுத்தல்’ என்கின்றனர். ஓலைப் பெட்டியில் எடுத்து வந்த பொருள்களில் ஒரு பகுதியைப் பாடல் படிக்கும் வில்லிசைப் பாடகருக்கும், மற்றொரு பகுதியை மேளக்கார அன்னாவிக்கும் கொடுப்பார்.

பிறகு மேல்புறமும் அடிப்புறமும் தோல் சீவப்பட்ட செவ்விளநீர்க் காய்க்கு முழுவதும் குங்குமம் பூசி, அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து ஐயனார் சந்நிதிக்குக் கொண்டுசெல்வார்கள். அங்கே பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் தேரிக் காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது செவ்விளநீர். கூடவே, கள்ளர்சாமி ஆடும் நபரைக் கள்வனாகக் கருதி அவரின் கைகளைக் கயிற்றால் கட்டித் தேரிக் காட்டுக்கு இழுத்துச் செல்கிறார்கள். கள்ளர்சாமியைச் சுற்றிலும் முன்னடிமாடன், வன்னிய ராஜன், பட்டவராயன், பலவேசக்காரன், சங்கிலிமாடன், உதிரமாடன், கருப்பன், பெரியாண்டவர் ஆகிய சாமிகளைச் சுமந்தபடி, சல்லடையும் குல்லாவும் அணிந்த சாமியாடும் சாமிமார்கள் வருவார்கள்.

மண்ணெடுத்தல்!

தேரிக் காட்டை அடைந்ததும், அங்கே குவிக்கப்பட்ட மணல்மேட்டில் செவ்விளநீர் வைக்கப்படுகிறது. கள்ளர்சாமியின் கையைக் கட்டிய கயிற்றின் முனையை வன்னியராஜாவுக் காகச் சாமியாடுபவர் பிடித்துக்கொண்டு, அந்த மணல்மேட்டில் வைக்கப்பட்டிருக்கும் செவ்விள நீரை அரிவாளால் வெட்டுவார். பின்னர், கள்ளர்சாமிக்குத் தண்ணீர் தெளிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து கோயிலுக்கு வந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, மறுநாள் காலையில் கிடா வெட்டி, சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்புவார்கள்.

தேரிக் காட்டில் செவ்விளநீர் வெட்டப் பட்டதும், இளநீரிலுள்ள தண்ணீர்பட்ட செம்மண்ணைப் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளி எடுக்கின்றனர். இதனை ‘மண்ணெடுத்தல்’ என்கின்றனர். இந்த மண், பார்ப்பதற்கு ரத்தம் சிந்தியது போல இருக்கும். இந்த மண்ணை வீடுகளில், கடைகளில், வியாபார நிறுவனங்களில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த மண்ணை நெற்றியில் பூசிவருவதோடு, தண்ணீரில் கலந்து காய்ச்சல், வயிற்றுவலி தீர்க்கும் நிவாரணியாக வும் குடித்து வருகின்றனர்.

இதோ... கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. திருவிழாவை எதிர்நோக்கியிருக்கிறது ஐயனாரின் திருக்கோயில். அன்பர்கள்... குறிப்பாக ஐயப்பமார்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ஐயனாரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் உங்கள் எதிர்காலம் சிறக்கும் வாழ்க்கை செழிக்கும்.

இலாட சந்நியாசி :

அதிவீரணசூர பாண்டிய மன்னருக்கு அமைச்சராக இருந்து ஆலோசனை கூறிய ஐயனாருக்கும் ஆலோசனை சொல்வதற்காக ஓர் அமைச்சர் இருந்தார். அவர்தான் இலாட சந்நியாசி. ஐயனார் சந்நிதிக்கு முன்புள்ள மகா மண்டபத்தில், ஐயனாருக்கு வலப்புறத்தில் அருளும் விநாயகப் பெருமானுக்கு அருகிலேயே ‘இலாட சந்நியாசி’ அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். ஐயனாருக்கு ஆலோசனை கூறும் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள இவர், முனிவரின் வடிவம்கொண்டு முனீஸ்வரராகத் திகழ்கிறார்.

ஐயனாருக்கு உகந்த நாள்

புதன் மற்றும் சனிக்கிழமைகளும் மாதம்தோறும் உத்திர நட்சத்திர நாளும் ஐயனாருக்கு உகந்த நாள்கள் ஆகும். இந்த நாள்களில் ஐயனாருக்கு வெள்ளைநிறப் பட்டும், ரோஜா மாலையும், தேவியருக்கு
ச் சிவப்புநிறப் பட்டும், மல்லிகைப் பூமாலையும் சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கல்லினால் செய்யப்பட்ட யானை, குதிரை சிலைகளை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.

குதிரை வாகனம் :

இங்குள்ள ஐயனாருக்கு யானையுடன் குதிரையும் வாகனமாக உள்ளது. பொதுவாக ஐயனார் குதிரையின் மீது இருக்கும் கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால், இங்கு குதிரை மட்டும் தனியாக இருக்கிறது. மக்களுக்கு நீதி கூற வேண்டும் என்பதற்காகத்தான் ஐயனார் குதிரையின் மேலிருந்து கீழே இறங்கி அமர்ந்துள்ளார் என்கின்றனர் ஊர்ப் பெரியவர்கள். 

ஒரே சந்நிதியில் மூன்று அம்மன்கள் :

இங்கே, வடக்கு நோக்கி மூன்று அம்மன்கள் அருட்காட்சி தருகின்றனர். பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் பேச்சியம்மன் இங்கே நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். பேச்சியம்மனுக்கு வலப்புறத்தில் உச்சினி மாகாளியும், இடப்புறத்தில் ராக்காயி அம்மனும் காட்சி தருகின்றனர்.

பங்குனி உத்திரம் :

`உத்திரத்தில் உதித்தவன் ஐயன்’ என்று ஐயனாரின் அவதாரம் பற்றிக் கூறுவதைப் போல் கார்த்திகை மாத கள்ளர் வெட்டு தவிர, பங்குனி உத்திரத்தன்றும் ஐய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. கோயிலின்
தல விருட்சம் வக்கணத்தி மரம் (தற்போது கோயிலில் இல்லை) என்று கூறுகிறார்கள்.

பிள்ளை வரம் தரும் பேச்சியம்மன் :

குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பேச்சியம்மனுக்கு மஞ்சள்நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டு, வேப்பமரத்தில் தொட்டில் கட்டி, மரப்பாச்சி பொம்மை வாங்கிப்போட்டால் மரத்தில் தொட்டில் ஆடுவதுபோல அடுத்த வருடமே வீட்டிலும் தொட்டில் ஆடும் என்கின்றனர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது ?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ளது காயாமொழி. காயாமொழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் குதிரைமொழி – தேரிக் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு கற்குவேல் ஐயனார் திருக்கோயில். காயாமொழியிலிருந்து மினி பஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.

நடைதிறப்பு நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (மதியம் நடை அடைப்பு இல்லை)

தொடர்புக்கு: திருக்கோயில் அலுவலகம்: 04639 – 232530.

தநுர்மாஸம், மார்கழி பெயர் காரணம்

தநுர்மாஸம், மார்கழி பெயர் காரணம்



தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்குப் பண்ணுவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘ஸௌரமானம்’ என்பது ஸுர்யனை வைத்துப் பண்ணினது. பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாஸமாக ஸுர்யன் தாண்டிக்கொண்டே போய் ஒரு வருஷம் பூர்த்தியானவுடன் மறுபடி ஆரம்பித்த ராசிக்கே வருகிற மாதிரி பூமி அதைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போகும் போது தோன்றும். வாஸ்தவத்தில் ஸுர்யன் இருந்தபடிதான் மத்தியில் இருப்பது. பூமிதான் அதைச் சுற்றிக் கொண்டே போய் ஒரு வருஷம் ஆனதும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது. ஆனால் பார்வைக்கு மாறுதலாகத் தெரியும். பூமியின் அந்த ஒரு ஸுர்ய ப்ரதக்ஷிணம் மாஸத்திற்கு ஒரு ராசி வீதம் நடந்து 365 நாளில், அதாவது ஒரு வருஷத்தில் பன்னிரண்டு ராசியையும் ‘கவர்’ பண்ணிவிடுகிறது. இவ்வாறு உள்ளபடியே வைத்துக் கொண்டாலும் ஒரு ராசிக்கு வருஷத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான காலம் பிடிக்கிறது என்ற fact நிற்கிறது. ஒவ்வொன்றின் பெயரிலுமாக, முதல் மாஸத்தை ‘மேஷம்’ என்கிற ராசியில் ஆரம்பித்து, அதற்கு மேஷ மாஸம் என்று பெயர் கொடுத்து, அப்படியே வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகிற போது ஒன்பதாவது மாஸம் தநுர் ராசியாக அமைவதால் அதற்கு தநுர்மாஸம் என்று பெயர்.

இன்னொரு விதக் கணக்குக்குச் சாந்த்ரமானம் என்று பெயர். சந்த்ரனை வைத்து கணக்குப் பண்ணுவதால் அப்படிப் பெயர். அதன்படி ஒரு க்ருஷ்ண பக்ஷம் ‘ப்ளஸ்’ ஒரு சுக்ல பக்ஷத்திற்கு எத்தனை நாள் பிடிக்கிறதோ அது ஒரு மாஸம். பெரும்பாலும் ஒரு க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து அடுத்த க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை என்றே சாந்த்ரமானக்காரர்கள் அநுஸரிக்கிறார்கள். வடக்கே ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாஸம் என்று வைத்துக் கொள்வதும் இருக்கிறது.

தமிழ் தேசத்தில் இந்தச் சாந்த்ரமான வழக்கே ரொம்ப காலத்துக்கு முன்னால் இருந்ததால்தான் மாஸத்திற்கே ‘திங்கள்’ என்று சந்த்ரனின் பெயரைக் கொடுத்திருக்கிறது.

இதில் எந்த நக்ஷத்திரம் ஒரு பௌர்ணமியன்று சந்திரனுக்குக் கிட்டேயிருக்கிறதோ அதன் பெயரையே அந்த மாஸத்திற்குப் பெயராக வைத்திருக்கிறது. சித்ரா நக்ஷத்திரம் பூர்ணிமை சந்திரனுக்குக் கிட்டேயுள்ள மாஸம்தான் சித்திரை, வைகாசம் அப்படி இருப்பது வைகாசி, தமிழில் அந்த நக்ஷத்ரப் பெயர்கள் ரொம்பவும் ரூப பேதம் (உருமாற்றம்) அடைந்து ‘ப்ரோஷ்டபதி’ என்ற நக்ஷத்ரப் பெயரிலான மாஸம் ‘புரட்டாசி’, ச்ராவண நக்ஷத்ர மாஸம் ‘ஆவணி’, ‘தைஷ்யம்’ என்பது ‘தை’ என்று இப்படியெல்லாம் ஆகியிருப்பதில்தான் ‘மார்க்கசீர்ஷம்’ என்பது ‘மார்கழி’ என்றாகியிருக்கிறது.

தாரா (தாரகை) மண்டலத்தில் ‘நக்ஷத்ரங்கள்’ என்று பிரதானமாக இருக்கிற இருபத்தேழும் ராசிக்கு இரண்டே கால் நக்ஷத்ரம் வீதம் பன்னிரண்டு ராசிகளில் கவர் ஆகி விடுகின்றன. ஒரு பூர்ணிமை நக்ஷத்திரத்திற்கு அடுத்த பூர்ணிமை நக்ஷத்ரம் இரண்டே கால் நக்ஷத்ரம் தள்ளி அடுத்த ராசியைச் சேர்ந்ததாக இருக்கும். இப்படி இருப்பதால் இங்கேயும் பன்னிரண்டு பூர்ணிமைகளில் – அதாவது பன்னிரண்டு மாஸத்தில் ஒரு வருஷ காலம் பூர்த்தியாகிவிடுகிறது…. மலமாஸம், அதிக மாஸம் என்று ரொம்ப detail-ல் போகாமல் சொல்லிக் கொண்டு போகிறேன்….

ஸௌரமானப்படி மேஷ மாஸம் என்பது இங்கே சித்திரை மாஸம். ரிஷப மாஸம் என்பது வைகாசி மாஸம். இப்படியே ஸௌரமான தநுர் மாஸம்தான் சாந்த்ரமான மார்க்கசீர்ஷமாகிற மார்கழி.

சிவ-விஷ்ணு அபேதம் போல் சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் .

ஸர்வம் ஸ்ரீ
 கிருஷ்ணார்ப்பணம் .

ஆன்மீகத்திற்கு என்று ஒரு மாதமே சிறப்பு வாய்ந்தது என்றால் அது மார்கழிதான்!

மார்கழி மாதம் சிறப்புகள்


மார்கழி மாதமானது பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய மாதமாகும். இம்மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் ஆகும். ஆன்மீகத்திற்கு என்று ஒரு மாதமே சிறப்பு வாய்ந்தது என்றால் அது மார்கழிதான்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க மார்கழி மாதத்தின் மேலும் பல சிறப்புக்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

மார்கழி மாதம் சிறப்புகள்
சிறப்பு பெயர்

மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு. சைவர்கள் இம்மாதத்தை தேவர் மாதம் என்றும் குறிப்பிடுவர்.

தெய்வ வழிபாட்டுக்கு உகந்த மாதம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழி மாதமானது தெய்வீகம் தவளக் கூடிய மாதமாகும். இம் மாதத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். மேலும் மார்கழி மாதத்தை இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகின்றது.

பிராண வாயு
🙏🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்தில் மார்கழி மாதத்தில் தான் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மார்கழி மாதத்தில் ஓசோன் படலத்திலிருந்து வரும் சுத்தமான காற்றைப் போல் வேறெந்த மாதத்திலும் கிடைப்பதில்லை. அதனால் தான் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுமாறு முன்னோர்கள் வழிவகுத்து சென்றுள்ளனர்.

தானம்
🙏🙏🙏🙏

இம்மாதத்தில் செய்யும் எந்த ஒரு தானமும் நமக்கு பெரும் பாக்கியத்தைச் சேர்க்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. மார்கழி மாதத்தில் தானம் செய்வதும் பாவங்களை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. இம்மாதத்தில் கம்பளி போன்றவற்றை தானம் கொடுப்பது சிறந்ததாகும்.

வருடம் முழுவதும் பலன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஒருநாள் இறைவனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் இறைவழிபாடு செய்த பலனை நமக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மார்கழி முழுவதும் தவறாமல் இறைவழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் மிகச்சிறந்த பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்த மாதம் மார்கழி மாதமாகும்

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்ட போது, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டனர். அப்போது கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.

மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழி மாதமானது மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.

வைகுண்ட ஏகாதசி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதங்களில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

நாயன்மார்களின் குருபூஜை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.

ஆண்டாள் திருப்பாவை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விஷ்ணு பகவானை மணக்க, பெரியாழ்வாருக்கு மகளாகப் பிறந்த ஆண்டாள், மார்கழி மாதம் “மார்கழித் திங்கள் அல்லவா…” என்று ஆரம்பித்து, 30 பாசுரங்களை தினம் ஒன்றாகப் பாடி வழிபட்டு மணந்தார் என்பதும் இம்மாதத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.

 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.